பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை – காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக்
கேரள மாநிலம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மோடி இனத்தவர் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் இறுதி தீர்ப்பு வெளியானது, அதில் ராகுல் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை காரணமாக அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது, இதன் காரணமாக நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுனகர்கே தலைமையில் ஏப்ரல் மாதம் மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.
இதனிடையே காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அனைவருடனும் அடுத்த மாதம் ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் இது குறித்து அவர் பேசுகையில் நாடாளுமன்றத்தில் மோடி மற்றும் அதானி குறித்து கேள்வி ராகுல் காந்தி கேட்டதனால் அவரை பதவி நீக்கம் செய்வது சரியா எனவும், பாஜகவின் இந்த மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச போவதில்லை, பாஜகவினர் செய்யும் தவறுகளை மக்களிடம் இருந்து மறைக்க இது போன்ற தவறான செயல்கள் செய்கிறார்கள், நாட்டில் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபடுவோரை பாஜக அரசு தப்ப விட்டு விடுவதாகவும் அதனை கேள்வி கேட்ட ராகுலுக்கு சிறை தண்டனையா என கேள்வி எழுப்பிய அவர் அதற்கான பதிலை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கூறுவார்கள் என தெரிவித்தார்.