திமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு!!

0
174
#image_title

திமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பார் கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் அமர்நாத். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளராக பணி செய்து வந்துள்ளார். ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்த அமர்நாத் தற்போது இன்சார்ஜ் பில் கலெக்டராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் மார்ச் மாதத்துடன் கடந்த ஆண்டிற்கான கணக்கு வழக்குகள் முடிவுற்று, இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய ஆண்டிற்கான கணக்கு வழக்கு துவங்க உள்ள நிலையில் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரை அழைத்த நகராட்சி ஆணையர் குமரன், நகர மன்ற தலைவர் சுப்புராயலு முன்னிலையில் கூட்டம் நடத்தி அனைவருக்கும் பிரியாணி விருந்து செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் அமர்நாத் திடீரென உருட்டு கட்டையை எடுத்து வந்து நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த திமுக நகர மன்ற தலைவர் சுப்புராயிலுவின் அரசு காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை கண்ட நகராட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசாரை வரவழைத்து இளைஞர் அமர்நாத்தை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அமர்நாத்தை பிடித்து சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் திமுக நகர மன்ற தலைவர் சுப்புராயிலுவின் காரை இளைஞர் அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து கேட்டபோது, நகராட்சி ஆணையர் குமரன் மீது இருந்த அதிருப்தியின் காரணமாகவே இளைஞர் இத்தகைய செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. நகராட்சி ஆணையர் குமரன் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியில் உள்ள பணியாளர்களை அழைத்து தொடர்ந்து பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், அதிலும் குறிப்பாக பெண் பணியாளர்களை மட்டும் அழைத்து பேசும் நகராட்சி ஆணையர் குமரன் ஆண் பணியாளர்களை அழைத்து பேசுவது இல்லை என்றும் இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அமர்நாத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சியில் தனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா என்ற குழப்பத்தில்! அங்கு நின்றிருந்த நகரமன்ற தலைவரின் அரசு காரை அடித்து நொறுக்கி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் திமுக நகர மன்ற தலைவரின் கார் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.