சைக்கோ படத்தை இரண்டு தடவைப் பார்க்கும் அளவுக்கு ஒரு **** இல்லை:ரசிகனைக் கலாய்த்த மிஷ்கின்!

Photo of author

By Parthipan K

சைக்கோ படத்தை இரண்டு தடவைப் பார்க்கும் அளவுக்கு ஒரு ….. இல்லை:ரசிகனைக் கலாய்த்த மிஷ்கின்!

பாரம் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் மேடையில் அநாகரீகமாகப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சைக்கோ படம் வெளியானதில் இருந்து விமர்சகர்களுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் இடையிலான வார்த்தைப் போர் உச்சத்தைத் தொட்டு வந்தது. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகியது. இளையராஜாவின் இசை மற்றும் கேமரா ஆகியவற்றுக்காக படம் ரசிகர்களால் பரவலாக பாராட்டப்பட்டாலும், லாஜிக் ஓட்டைகள் கொண்ட திரைக்கதையை பெரிதும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத இயக்குனர் மிஷ்கின் இதற்குப் பல காரணங்களை சொல்லிக் கொண்டு வந்தார்.

இந்நிலையில் இப்போது சைக்கோ படம் தொடர்பாக தனக்கும் ரசிகருக்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்றை வெளிப்படுத்தி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார். இயக்குனர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தேசிய விருது பெற்றுள்ள தமிழ்த் திரைப்படம் பாரம். இந்த படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் ரிலிஸ் செய்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவரது பேச்சில் ‘என்னுடைய சைக்கோ படத்தை ஒரு ரசிகர் ரெண்டு தடவை பார்த்ததாக சொன்னார். அவரிடம் ரெண்டு தடவைப் பார்ப்பதற்கு அந்த படத்தில் ஒரு முடியும் இல்லை. உனக்கு வேலையில்லையா எனக் கேட்டேன்’ எனக் கூறியது மேடையில் இருந்தவர்களையே முகம் சுளிக்க வைத்தது. வேறொரு படத்தின் விழாவில் இப்படி தன்னைப் பற்றியும் தன் படங்களைப் பற்றியுமே பேசிக் கொள்வதை இயக்குனர் மிஷ்கின் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.