ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
தமிழக ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் இவருக்கும் தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறித்து தமிழக அரசை அவமரியாதை செய்யும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் நேற்று குடிமைப்பணி தேர்வு மாணவர்கள் ஆளுநர் ரவி கலந்துரையாடி பேசிய போது ஆளுநர் அரசு தரும் மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதை நிராகரிப்பதாக பொருள் எனவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு பணம் பயன்படுத்தப்பட்டதாக கூறியது பெரும் அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியது.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல் சமூக கருத்துக்களை பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துக்கள், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து நிர்வாக ஒழுங்கை கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
தனது பதவி பிரமாணத்திற்கு முரணான வகையில், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.