ஊரே நாற்றம் அடிக்கும் ஊரப்பாக்கம்! கண்டு கொள்ளாத அரசு

0
155

ஊரே நாற்றம் அடிக்கும் ஊரப்பாக்கம்! கண்டு கொள்ளாத அரசு

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். அந்த வகையில் சென்னை பெருங்களத்தூர் பகுதிக்கு அடுத்து உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடியேறி வருகின்றனர்.

குறிப்பாக அருகிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் பெருமளவில் இந்த பகுதியில் குடியேறி வருகின்றனர். இவ்வாறு மக்கள் நெருக்கம் அதிகமாக உருவாகி வரும் இந்த பகுதியில் போதிய அளவில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கழிவுநீர் கால்வாய் இல்லாத காரணத்தாலும் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாமல் போன காரணத்தாலும் அந்த பகுதி அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக
ஊரப்பாக்கம் கங்கை நகரில் இது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அரசோ அரசு ஊழியர்களோ இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தம் தரும் ஒன்று அப்பகுதியில் வாழும் போது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கிய நிலையில் உள்ள காரணத்தால் அப்பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகமாகி வருகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் குப்பைகளை கொட்டும் தொட்டிகள் இல்லை என்ற காரணத்தால் ஆங்காங்கே சாலையின் ஓரத்திலும் குடியிருப்பு இடத்திலும் பொது மக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டியானது கழிவு நீர் நிரம்பி மழை நீர் சேகரிப்பு தொட்டியா இல்லை கழிவு நீர் சேகரிப்பு தொட்டியா என்ற கேள்வி எழும் நிலையில் தான் உள்ளது. அந்த அளவிற்கு தொட்டியில் கழிவு நீர் தேங்கி உள்ளது.

மேலும் அப்பகுதிகளில் உள்ள சாலை ஓரத்தில் வெட்டப்பட்ட குழி இன்னும் சரி செய்யப்படவில்லை இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அவதியை அனுபவித்து வருகின்றனர். இதை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.