அதிமுகவிற்கு இனி தொடர் வெற்றி! முன்னாள் அமைச்சர் செம்மலை
அதிமுக பொது குழு வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்குவது உள்ளிட்டவைகளுக்கு நேற்று தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொது குழுவில் எடுக்கப்பட்ட அணைத்து தீர்மானங்களும் செல்லும், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒதுக்குவதில் எவ்வித தடையும் இல்லை, அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகார பூர்வமாக அறிவிப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
இதனிடையே எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை தலைமையில் ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, அண்ணா பூங்கா அருகே உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுகவுக்கு இனிமேல் எந்த பிரச்னையும் இல்லை. உச்சநீதிமன்றம், சென்னை உயா் நீதிமன்றம், தில்லி உயா்நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்துவிட்டது. தோதல் ஆணையமும் அங்கீகரித்துவிட்டது.
அதிமுகவும், இரட்டை இலைச் சின்னமும் எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது. அதிமுக எழுச்சியுடன் எல்லா தேர்தலையும் சந்தித்து வெற்றி வாகைசூடும். 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் அதிமுகவுக்கான தேர்தலாக அமையும். யாா், யாரையெல்லாம் கட்சியில் இணைத்துக்கொள்வது என்பது குறித்து பொதுச்செயலாளா் தான் முடிவு செய்வாா்.
இனிமேல் அதிமுகவில் எந்த பிளவும் பிரச்னையும் இருக்காது. அதிமுக இயக்கத்துக்கும், சின்னத்துக்கும் உரிமை கொண்டாடியவா்கள் இனிமேல் அதை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் சட்டப்படி கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றாா்.