தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வரும் மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக இருக்கிறது.
இந்த சூழலில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் அனைவரும் 11-ம் வகுப்பில் சேர வேண்டும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும், குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 11ஆம் வகுப்புகளில் எந்தெந்த பாடப்பிரிவுகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் எந்தெந்த பட்டப் படிப்புகளை படிக்கலாம் என்பது குறித்த தகவல்களையும் வீடியோ வடிவில் தயாரித்து பள்ளிக்கல்வித்துறை வழங்கி இருக்கிறது.
மேலும் இது குறித்த தகவல்களை அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் எட்டு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க வேண்டும் என்றும் கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.