குறைந்துள்ளதா கொரொனா வைரஸ் பாதிப்பு? சீன அரசு அறிவிப்பு!
சீனாவில் வேகமாக பரவி 2000க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற கோவிட் 19 நோய் பரவல் தற்போது குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2118 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர்.
70000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுதான் இந்த வைரஸ் மூலம் நடக்கும் தாக்குதலுக்கு கோவிட்-19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நோய் தொற்று வெகு விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் கொரோனா பற்றி உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரே இறந்துள்ளதால் மக்கள் முகமூடி அணிந்தே வெளியெ செல்கின்றனர்.
சீனா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா என்ற பெயரே பீதியைக் கிளப்பி வருகிறது. இதற்கான பிரத்யேக மருந்துகள் எதுவும் இல்லை என்பதால் நோய் எதிர்ப்பு மருந்துகளே கொடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே சென்று கொண்டிருந்த நிலையில் இப்போது கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று முந்தினம் கொரோனா வைரஸால் 1749 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 394 பேர் மட்டுமே. இதனால் வைரஸ் பரவல் கணிசமாகக் குறைந்துள்ளதாக சீன சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால் உண்மை நிலவரம் போக போகதான் தெரியும் என சொல்லப்படுகிறது.