இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஈரான் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

0
153
#image_title

இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினரால் சிறைபிடிப்பு.நான்கு கேரளா மாலுமிகள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு உடனடியாக தலையிடக் கோரி தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் உள்ள மார்ஷல் தீவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், மேற்காசிய நாடான குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. ‘அட்வான்டேஜ் ஸ்வீட்’ என்ற இந்தக் கப்பலில் இந்திய பணியாளர்கள் 24 பேர் இருந்தனர்.

இது, மேற்காசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு மேற்காசிய நாடான ஈரானின் கடற்படையினர், தங்கள் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கூறி இந்தக் கப்பலை சிறைப்பிடித்தனர்.

கப்பல் சிறை பிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, ‘ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற சம்பவங்களை ஈரான் நிறுத்த வேண்டும்.

சிறைபிடித்த கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என கூறியுள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் அந்நாட்டிற்கும் இடையே மோதல் நிலவும் நிலையில், அமெரிக்க கப்பல் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கப்பலில் கேரளாவை சேர்ந்த 4 மாலுமிகள் உள்ளனர். நிலம்பூர் சுங்கத்தாரைச் சேர்ந்த சாம் சோமன், எர்ணாகுளம் கூனன்மாவு பகுதியைச் சேர்ந்த எட்வின், கடவந்திராவைச் சேர்ந்த ஜிஸ்மோன், ஜிபின் ஜோசப் ஆகியோர் கப்பலில் சிக்கினர்.

உடனடியாக மத்திய அரசு தலையிட்டு மீட்டு தர வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் கேரளா தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ், மத்திய அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி சிக்கியவர்களை மீட்டு வர வேண்டும் என வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.