கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினையில் திருவிழாக்களுக்கு 145 தடை உத்தரவு பிறப்பித்த RDO!
தடையை மீறி சித்ரா பௌர்ணமி அன்னதானம் வழங்கிய பொதுமக்களையும், சாமி தரிசனம் செய்ய வந்த இந்து முன்னணியினரையும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள காஞ்சனகிரி மலை கோவில் நிர்வாகம் தொடர்பாக இரு தரப்பினருக்கு பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து, திருவிழாக்களுக்கு தடை விதித்து 145 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், சித்ரா பெளர்ணமி வழிபாட்டுக்கு பின் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ஒருதரப்பினரும், வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டுமென இந்துமுன்னணியினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாலாபேட்டையில் உள்ள காஞ்சனகிரி மலையின் மீது உள்ள சிவனாலயத்தை நிர்வாகம் செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் நடைபெற்ற நிலையில், ஆலயத்தில் வழிபாடு, திருவிழா நடத்த 145 தடை உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்தார்.
இந்த தடை உத்தரவை மீறி ஒருதரப்பினர். இன்று சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சாமியை ஜோடித்து வழிபாடு செய்வதோடு அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுக்க முயன்றதால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
மறுபுறம் இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர், சிவன் ஆலயத்தில் வழிபாடு செய்ய தங்களை அனுமதிக்குமாறு கூறி அதே பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தடை உத்தரவை எடுத்து கூறி, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.