இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நான்கு ஆட்சியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கடல் சார்ந்த தொழில்களை மட்டுமே நம்பி அந்த மாவட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் இந்த மாவட்டத்தில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 ஆட்சியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அலுவலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவ ராவ் என்பவர் சுமார் 3 ஆண்டு காலம் பணியில் இருந்தார். அதன்பிறகு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் என்பவர் நியமிக்கப்பட்டார். பின்னர் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு எட்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார்.
அதன் பிறகு சந்திரகலா என்ற மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்ட சில மாதங்களே பணியில் இருந்தார். விடுப்பில் சென்றவர் திரும்பி வராததால் சங்கர்லால் குமாவத் என்பவர் பணியமர்த்தப்பட்டார். இவரும் ஒரு சில மாதங்கள் மட்டுமே பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜானிடாம் வர்கீஸ் என்பவர் பணியமத்தப்பட்டு அவரும் தற்போது மாற்றம் செய்யப்பட்டு விஷ்ணு சந்திரன் என்பவர் வருகிற திங்கள்கிழமை புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டது மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அலுவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக பொறுப்பேற்கும் பொழுது மாவட்ட ஆட்சியர்கள் இந்த மாவட்டத்தை முதன்மையான மாவட்டமாக மாற்ற வேண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முனைப்புடன் செயலாற்றி வரும் பொழுது திடீர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
மாவட்ட ஆட்சியர்கள் மாற்றத்திற்கான காரணம் தெரியாமலும் இதில் அரசியல் தலைவர்களின் தலையீடுகள் இருக்கலாம் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.