பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க கலந்தாய்வுக்கு விண்ணபிக்க நாளை கடைசி நாள் என்பதால் விருப்பம் உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றது.
2023-2024ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதி அதாவது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து தொடங்கியது. அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.
மே 19ம் தேதியுடன் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மேலும் மூன்று நாட்கள் விண்ணபிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டு 22ம் தேதி வரை விண்ணபிக்கலாம் என்று அரசு அறிவித்தது. இதனால் நாளை கடைசி நாள் என்பதால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவரும் நாளை வரையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நாளையுடன் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்டு மே 23ம் தேதி அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவர்களின் தரவரிசை பட்டியல் அனுப்பப்படவுள்ளது. பின்னர் மே 25ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மே 30ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும், ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வும் நடைபெறவுள்ளது.
கலந்தாய்வு நடந்து முடிந்த பின்னர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளது.