பூங்கொத்துகள் சால்வைகள் இனி கூடாது! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

பூங்கொத்துகள் சால்வைகள் இனி கூடாது! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!
தன்னை பார்க்க வருபவர்கள் வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் அனைவரும் பூவும் சால்வையும் கொடுத்து பணத்தை வீணடிக்காமல் புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாக கொடுங்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தரமையா அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த மே 20ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக டி.கே சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து முதலமைச்சர் சித்தராமையா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது. இது குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அவர்கள் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் டுவிட்டர் பக்கத்தில், “இனி பொது நிகழ்ச்சிகளானாலும் சரி தனிப்பட்ட சந்திப்பானாலும் சரி. என்னை பார்க்க வருபவர்கள் மரியாதை நிமித்தமாக எனக்கு பூங்கொத்து அல்லது சால்வைகள் கொடுக்க வேண்டாம். என் மீது அன்பும், மரியாதையும் செலுத்த நினைப்பவர்கள் அனைவரும் எனக்கு புத்தகங்களை பரிசளிக்க வேண்டும். உங்களின் அன்பும் பாசமும் என்மீது தொடர்ந்து இருக்கும்” என்று வலியுறுத்தியுள்ளார்.