ரேசன் கடைகள் இயங்காது!! பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
தமிழக அரசு ரேசன் கடைகளில் பலவிதமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயோமெட்ரிக் முறை, கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்துதல், ஆன்லைன் மூலமாகவே பெயர் மற்றும் முகவரி மாற்றம், சிறுதானிய ஆண்டை முன்னிட்டு இலவச கேழ்வரகு மற்றும் வீட்டில் இருந்தபடியே ரேசன் கடைகள் திறந்துள்ளதா, இன்று என்ன பொருட்கள் விநியோகிக்க படுகின்றன என்பதை குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொள்வது போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
மேலும் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கான பணிகள் நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில் ரேசன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
அதாவது ரேசன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும், பொருட்களை பாக்கெட் செய்து வழங்க வேண்டும், ஒரு பொருளுக்கு இரண்டு பில் போடும் முறை இருக்கிறது அதை மாற்ற வேண்டும், அனைத்து ரேசன் கடைகளிலும் 4ஜி இணைப்புகளை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு பதவி உயர்வு, காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்துதல் போன்ற 21 கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதலில் ஜூன் 9ம் தேதி மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். அதன் பிறகு ஜூன் 14ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.