திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விடுத்த புவியியல் மையம்!! 

Photo of author

By Amutha

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விடுத்த புவியியல் மையம்!! 

இன்று திடீரென அலாஸ்கா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையையும் அமெரிக்க சுனாமி அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா பகுதியில்  7.4 ரிக்டர் என்ற அளவுகோலில் சக்தி வாய்ந்த பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலாஸ்கா தீபகற்பம், அலுடியன் தீவுகள் மற்றும் குக் இன்லெட் பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கமானது, கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பொது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 50,000 மேற்பட்ட மக்கள் பலியாகினர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகின. பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தங்களின் வீடு வாசல்களை இழந்து ஏராளமான மக்கள் நடுத்தெருவில் நிற்கும் அளவிற்கு நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவை புரட்டி போட்டது.

அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக புவியியல் விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படியே அடுத்தடுத்து பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, ஜப்பான், மியான்மார், உள்பட பல நாடுகளில் அடிக்கடி தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்க நாட்டின் வடக்கே உள்ள மாகாணமான அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தோடு சுனாமி எச்சரிக்கையையும் விடப்பட்டுள்ளது. இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இதனால் மக்கள் அச்சமுற்று வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது, மற்றும் உயிரிழப்பு குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

அலாஸ்கா மாகாணமும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பசிபிக் ரிங் ஆப் பயர் பகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு கடந்த 1964 இல் ஏற்பட்ட 9.2 ரிக்டர் அளவிலான  சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமியும் ஏற்பட்டு சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது அங்கு மீண்டும் நிலநடுக்கத்தோடு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.