தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!!

0
112

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.

 

 

பழைய ஓய்வூதியத்திட்டம் கடந்த 2003 ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. பிறகு அத்திட்டம் ரத்து செய்யப்பட்டு 2004ம் ஆண்டு முதல் ‘தேசிய பென்சன் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. தற்பொழுது வரை அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் சிபிஎஸ் (CPS) எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் அமலில் உள்ளது.மேலும் தேசிய பென்சன் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இதற்கு காரணம் பழைய ஓய்வூதியத்திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி வசதி உண்டு. பென்சனுக்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது. அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பின் நிலையான பென்சன் கிடைக்கும். பென்சன் செலவுகளை அரசே ஏற்கும். பணிக்காலத்தில் அரசு ஊழியர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு பென்சன் கிடைக்கும் போன்ற சலுகைகள் இடம் பெற்றிருந்தன.

 

ஆனால் நடைமுறையில் உள்ள புதிய பென்ஷன் திட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதி வசதி கிடையாது.பென்சனுக்காக அரசு ஊழியர் சம்பளத்தில் மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும். பணி ஓய்வுபெற்றபின் நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் கிடையாது.இப்படி பழைய ஓய்வூதிய திட்ட சலுகைகள் அதிகம் இல்லாதவையே.

 

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் ஏற்கெனவே சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.

 

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

 

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கோபாலகிருஷ்ணன் என்பவரை நாகையில் உள்ள நாகூரை அடுத்த பொறையாத்தா தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று சென்று(ஜூலை 27) நலம் விசாரித்தார்.

மேலும் 107 வயதாகும் இவருக்கு ஓய்வூதியத்திற்கான வாழ்நாள் சான்று மற்றும் மக்களை தேடி மருத்துவ பெட்டகம், மருத்துவ செலவிற்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் போன்றவற்றை அமைச்சர் வழங்கினார்.

அப்பொழுது கருவூலத்துறை ஆணையர்,மீன் வளர்ச்சி கழகத் தலைவர்,தாட்கோ தலைவர்,மாவட்ட ஊராட்சி தலைவர்,நகர மன்ற தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

 

பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கூறியது:

 

தமிழகத்தில் 100 வயதுக்கு மேல் உள்ள 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று கருவூலத் துறை அதிகாரிகள் வாழ்நாள் சான்று வழங்கி வருகின்றனர்.

 

அதன்படி நாகை மாவட்டம் நாகூரில் 107 என்கிற தமிழகத்தில் அதிக வயதுடைய கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு கருவூலத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரடியாக வந்து சான்றிதழை வழங்கி உள்ளோம். 1916-ம் ஆண்டு பிறந்த கோபாலகிருஷ்ணன் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது ராணுவத்தில் மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றினார். தொடர்ந்து சுங்கத்துறையிலும், போலீஸ் துறையிலும் பணியாற்றி 1972-ம் ஆண்டு ஓய்வு பெற்று அரசின் ஓய்வூதியத்தை பெற்று வருகிறார் என்றார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருக்கிறார். மேலும் அமைச்சரின் இக்கருத்து அனைவரிடமும் கவனத்தை பெற்றுள்ளது.

Previous articleபித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…!
Next articleகிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!