உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.
இந்த அதிரடி உத்தரவால் காவல்துறை வெளியில் வருபவர்களிடம் கண்டிப்பு காட்டி வந்தது, இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று தமிழக முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையில் வெளியூர்களில் வெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் கூலித் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே சிக்கித்தவித்தனர். அவ்வாறு பீகாரில் இருந்து திருப்பூருக்கு வந்த 50 கூலித்தொழிலாளிகள் வேலை செய்து வந்த நூற்பாலைகள் மூடப்பட்டதால் பணமின்றி உணவின்றி வீட்டிலேயே முடங்கியிருந்தனர்.
செய்வதறியாது தவித்த அவர்கள் தாங்கள் குழுவாக அமர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்து தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் தமிழக முதல்வருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை டுவிட் செய்திருந்தனர். இதனை சனிக்கிழமை அன்று பார்த்த முதல்வர் பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் அளித்து இருந்தார்.
இந்த தகவலை பார்த்தவுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன் சம்பந்தப்பட்டர்களை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தார். உடனே ஒரு குழுவுடன் அந்த தொழிலாளர்கள் தங்கி இருந்த இடத்திற்கு நேரில் சென்று உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட கூலித்தொழிலாளர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்த ஆட்சியர் விஜய் கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதல்வருக்கு தெரியப்படுத்தினார்.
அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பலர் தங்களுக்கும் உதவி வேண்டும் என்று தகவல் அளித்துள்ளனர், இதற்கு சற்றும் சளைக்காமல் முதல்வரும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்துள்ளனர். இந்த உரையாடலை முழுவதும் பார்த்த தமிழக மக்கள் முதல்வரின் செயலை சிலாகித்து பாராட்டி வருகின்றனர்.