திருமலைக்கு பாதயாத்திரை சென்ற சிறுமி… சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்…
திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று தாக்கியதில் அந்த சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியின் திருமலைக்கு அலிப்பிரி வழியில் தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஆஞ்சநேயர்.கோவில் அருகே சென்ற பொழுது தினேஷ் அவர்களின் மகள் லட்சிதா அவர்கள் மாயமானார். இதையடுத்து மாயமான சிறுமியை தந்தை தினேஷ் மற்றும் குடும்பத்தினர் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்காததால் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சிறுமியை தேடத் தொடங்கினர். இதையடுத்து சிறுமி லட்சிதா அடர்ந்த வனப்பகுதியில் சடலமாக கிடப்பதை கண்டுபிடித்தனர். சிறுமியின் உடலில் இருக்கும் காயங்களை வைத்து பார்க்கையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்ததாக தெரிகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது போலவே ஒரு மாதத்திற்கு முன்பு இரவில் பெற்றோருடன் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை பிடித்து இழுத்துச் சென்றது. அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த வன ஊழியர் ஒருவர் இராட்சத ஒளி விளக்கை திடீரென்று ஒளிரவிட்டதால் அந்த சிறுவனை சிறுத்தை அப்படியே விட்டு சென்றது.
படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு வனத்துறையினர் திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒன்றரை மாதம் தீவிர சிகிச்சையில் இருந்த அந்த சிறுவன் நலம் அடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து குடும்பத்தினருடன் பாதயாத்திரை சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்து சென்று உயிரிழந்த சம்பவம் மலையேறும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.