30 ஆயிரம் ஆவின் பால் அட்டைகளை ரத்து செய்து அதிரடி காட்டிய அதிகாரிகள்!!
தமிழகம் முழுவதும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும் நிலையில் சென்னையில் தினமும் சுமார் 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றது.
இதில் மாதம் தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 4.5 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது.ஒரு அட்டைக்கு 1 லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும் இத்திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 9 லட்சம் குடும்பங்கள் பயனடைகின்றன.
ஆவின் நிறுவனம் கொழுப்பு சத்துக்களின் அடிப்படையில் பச்சை, நீலம், ஆரஞ்சு, மெஜந்தா, மெரூன் என பல நிறங்களில் பால் விநியோகம் செய்து வருகின்றது.இதில் குறிப்பாக பச்சை மற்றும் நீல நிறம் கொண்ட பால் பாக்கெட்டுகளை மக்கள் அதிகம் வாங்குகின்றனர்.இதன் விற்பனை ஜோராக நடைபெற்று வரும் நிலையில் கொழுப்பு நிறைந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளில் விற்பனை மந்தமாக இருக்கின்றது.இந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட் அரை லிட்டர் 30 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் பால் அட்டைதாரர்களுக்கு அவை 24 ரூபாய்க்கு விற்பனை செய்ய படுகின்றது.அதே போல் ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட் 60 ரூபாயாக விற்பனை செய்யப்படும் நிலையில் அட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கு விற்பனை செய்ய படுகின்றது.இதனால் ஆவின் வாடிக்கையாளர்களுக்கு லிட்டருக்கு 14 ரூபாய் மீதம் ஆகின்றது.இதனால் சிலர் லாபம் பார்க்கும் நோக்கில் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் தினமும் 15 ஆயிரம் லிட்டர் ஆரஞ்சு நிற ஆவின் பால் வணிக பயன்பாட்டிற்கு முறைகேடாக பயன் படுத்தபட்டு வந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து இந்த முறை கேட்டை தடுக்க ஆவின் பால் அட்டைதாரர்களின் ரேஷன் கார்டு, மின்சார கட்டண ரசீது,வாடகை வீடு ஒப்பந்தம் போன்றவற்றை ஆவின் அதிகாரிகள் 2 மாதங்களாக ஆய்வு செய்தனர்.இதில் 30 ஆயிரம் பால் அட்டைதாரர்கள் தவறான ஆவணங்களை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இவர்களின் இந்த செயலால் ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கின்றது.இதையடுத்து இந்த ஆவின் அட்டைகளை நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
மேலும் ஆன்லைன் வழியாக புதிய பால் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களின் வீட்டிற்கு தபால் மூலம் அட்டை அனுப்பி வைக்கப்படும்.இதற்கு கூடுதலாக ரூ.30 கட்டணம் வசூல் செய்யப்படும் என்று ஆவின் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.