பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துவந்த இஸ்லாமியர்கள்… இது மனிதமாண்பிற்கு சிறந்த உதாரணம்…
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றுக்கு இஸ்லாமியர்கள் சீர் வரிசை எடுத்து வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் இந்த செயல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வளநாடு பகுதியில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களாக வெங்கடேசபெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. புனரமைப்பு பணிகள் முடிவு பெற்றதை அடுத்து கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெங்கடேஷ பெருமாளுக்கு திருகல்யாண வைபவமும் நடைபெற்றது.
பின்னர் இதைத் தெடர்ந்து வளநாடு ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் திருக்கல்யாண நிகழ்வுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மலர்மாலைகள், வாழைப்பழம், தேங்காய், உப்பு, பழங்கள், நெய், அரிசி, பருப்பு, பீரோ உள்ளிட்ட பலவகையான பொருள்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
இந்த சீர்வரிசை வளநாடு முஹைதீன் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளிவாசலில் இருந்து தொடங்கி வெங்கடேஷ பெருமாள் கோவில் வரை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சீர் வரிசை வெங்கடேஷ பெருமாள் கோவிலின் திருக்கல்யாண வைபவத்திற்கு சீர்வரிசை கொண்டு வந்து கொடுத்தனர்.
சீர்வரிசை பொருட்களுடன் கோவிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் அனைவரையும் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அன்புடனும் பணிவுடனும் வரவேற்றனர். பின்னர் இஸ்லாமியர்கள் எடுத்து வந்த சீர்வரிசை பொருட்கள் பொருமாள் கேவிலுக்கு கொடுக்கப்பட்டது. அந்த சீர்வரிசை பொருட்களை பெற்றுக் கொண்ட கோவில் நிர்வாகத்தினர் இஸ்லாமியர்களுக்கு மரியாதை செலுத்தினர். இஸ்லாமியர்கள் சீர்வரிசை கொடுத்த பின்னர் வெங்கடேஷ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
இந்த திருக்கல்யாண வைபவத்தின் பொழுது இஸ்லாமியர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகிகள் ஜமாத் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிந்தா மரியாதை செலுத்தினர். இஸ்லாமியர்கள் பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு வந்தது அனைவருடயை கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல் மனிதமாண்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.