பிரதமர் மோடி குறித்த சமீபத்திய பியூ சர்வே.. இந்திய மக்களின் நிலைப்பாடு!!
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான வாஷிங்டனில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பியூ ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.இந்த ஆய்வு மையம் உலக நாடுகளில் நிலவும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு ஆண்டு தோறும் அவர்களின் பதில்களை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் பியூ ஆய்வு மையத்தின் இந்த ஆண்டிற்கான கருத்து கணிப்பு கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் மொத்தம் 24 நாடுகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
இதில் இந்தியா குறித்து பெரும்பாலான நாடுகள் ஆதரவான கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றன.இதில் 10ல் எட்டு இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.
உலகளவில் கருத்து தெரிவித்ததில் 46% பேர் இந்தியாவிற்கு ஆதரவாகவும்,34% பேர் இந்தியாவிற்கு எதிராகவும்,16% பேர் எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை என்று தெரிகிறது.
மேலும் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே பிரதமர் மோடி குறித்து எதிராக நிலைப்பாடு கொண்டுள்ளனர்.இந்திய நாட்டின் செல்வாக்கு பொருளாதார ரீதியாக,தொழில் நுட்பங்கள் ரீதியாக உயர்ந்துள்ளதாகவும்,உலகரங்கில் இந்தியா வலுவடைந்து வருவதாகவும் 10ல் ஏழு இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இதில் பலவீனம் அடைந்து வருவதாக 5ல் ஒரு பகுதிக்கும் கீழ் உள்ளவர்களின் கருத்தாக இருக்கின்றது.
மேலும் அமெரிக்காவின் செல்வாக்கு உயர்ந்து வருவதாக 49 சதவீத இந்தியர்கள் கருத்து கூறியுள்ள நிலையில் 41 சதவீத இந்தியர்கள் ரஷ்யாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். சீனா குறித்து இந்தியர்கள் கலவையான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.