விளையாட்டாக பேசிவிட்டார் விளையாட்டுத்துறை அமைச்சர்!! அதுக்கெல்லாம் இப்படி செய்ய கூடாது – டிடிவி தினகரன் கண்டனம்!!
அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு எழுந்து வரும் எதிர்ப்புக்கு காட்டுமிராண்டித்தனம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மாநாடு ஒன்றில் பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி தேசிய அளவில் விவாதங்களை தற்போது கிளப்பி உள்ளார். அவருக்கு எதிராக ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மற்றும் டெல்லியில் அவருக்கு எதிராக போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சாரியா என்பவர் சனாதான தர்மத்தை இழிவுபடுத்திய உதயநிதியின் தலையை கொண்டு வருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று பரபரப்பு கிளப்பும் வகையில் அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருப்பதாவது,
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத உணர்வை பாதிப்பது போல பேசியது தவறு. விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக சனாதனம் என்றால் என்னவென்று தெரியாமலேயே பேசியுள்ளார். ஆனால் அதற்காக எல்லாம் ஒரு அமைச்சரின் தலைக்கே விலை பேசுவது என்பது காட்டுமிராண்டித்தனமான செயல்.
செலவை குறைப்பதற்காக ஒரே நாடு! ஒரே தேர்தல்! என்ற திட்டம் சாத்தியமில்லை. ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் செலவு அதிகமாக தான் வந்துள்ளது. எனவே மத்திய அரசு அறுதி பெரும்பான்மை இருப்பதால் எதையும் செய்யக்கூடாது . மக்களிடம் கருத்து கேட்ட பின்பு இதுபற்றி முடிவு செய்ய வேண்டும்.
என்னிடம் எங்களது நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி உள்ள கூட்டணியில் இடம்பெற வேண்டுமா? என்று கேட்டு வருகின்றனர். எனவே இதன் அடிப்படையில் தனியாக நிற்பது தான் சிறந்தது என்ற முடிவை எடுக்கலாம். ஆனால் தீய சக்தியின் ஜெயிக்க கூடாது! துரோக சக்தியும் ஜெயிக்க கூடாது! என்பதே எங்களது தலையாய நோக்கம். அதற்காகத்தான் தனித்து நிற்க தயார் என்று தெரிவித்தேன்.
வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாங்கள் தனித்து போடுவதற்கு போட்டியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.