மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி
அரசியல்வாதியும், எண்ணற்ற மக்கள் தொண்டும், கல்வி சேவையும் ஆற்றிய மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவிடத்தில் அஇஅதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பி.கே. மூக்கையாத் தேவர் அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அவரது காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் படிப்பதற்கு பள்ளியும் கல்லூரியும் அவரது முயற்சியால் கட்டப்பட்டது. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு அரசியல் களத்திலும், சமூக தொண்டு ஆற்றுவதிலும் பக்க பலமாக இருந்ததும் இவர்தான். பிற சமூகத்தை சார்ந்தவர்களையும் அரவணைத்து வழிநடத்து செயலாற்றிய மூக்கையாத் தேவர் அவர்கள் செப்டம்பர் 6ஆம் தேதி 1979 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
அவரின் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினத்திலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் மூக்கையா தேவர் அவர்களின் நினைவிடத்தில் பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்களும் பல்வேறு கட்சியின் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்படும் அந்த வகையில் அஇஅதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அதிமுகவின் நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அதிமுகவின் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. R.B. உதயகுமார், M.L.A., அவர்கள் செய்திருந்தார்.
ஓபிஎஸ் தரப்பைக் காட்டிலும் எடப்பாடியார் தரப்புக்கு தென் தமிழகத்திலும்; மதுரையிலும் செல்வாக்கு உள்ளது என்பதை காண்பிப்பதற்காக மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தப்பட்டது என்றும் அடுத்த மாதம் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விழாவில் இன்னும் சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.