ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன?
அஇஅதிமுக தலைமைச் செயலகத்தில் இன்று இக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களின் புதிய நியமனம் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில், கட்சியின் தலைமையிடமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி அன்று நடைபெற்ற அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறப்புடன் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநாட்டுக் குழுவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நிர்வாகிகளுக்கு விரிவான ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் வியூகத்திற்காக மாவட்ட செயலாளர்கள் புதிய நியமனம் குறித்தும், ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் நிர்வாகிகளும் விரைவில் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தான் கூட்டணி என்று உறுதியாகிவிட்ட நிலையில் அதிமுக எந்தெந்த தொகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்று வலுவாக உள்ளது என்பது குறித்தும் ரகசிய ஆய்வு நடத்த சொல்லி மாவட்ட செயலாளர்களை எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இனி மாதந்தோறும் தலைமைக் கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தவும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்தவும் அதிமுக திட்டமிட்டு உள்ளதாகவும் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது.