அவர் உங்களிடம் சிலைவைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல கேட்டாரா?? அதை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?? ஐகோர்ட் கேள்வி!!
விநாயகரே சிலை வைக்க கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி கேட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. எப்பொழுதும் விநாயகர் சிலை நிறுவி பூஜை செய்த பின்னர் குறிப்பிட்ட சில நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை கரைப்பது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூரில் 13 இடங்களிலும், கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகையில் 16 இடங்களிலும், சிலைகள் வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் இந்து மக்கள் கட்சி சார்பில் காவல் நிலையங்களில் மனு அளிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இந்த மனு நிராகரிக்கப்பட்டதால் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னால் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலைவைக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் அந்தந்த பகுதிகளில் சட்டம், ஒழுங்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு சிலை வைப்பதற்கான அனுமதிகள் கோரிய மனுக்கள் மீது உள்ளூர் போலீசார் அனுமதி வழங்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் ஈரோடு மாவட்டம் அன்னூரில் வசிக்கும் நபர் கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகை சிலை வைக்க அனுமதி கோரியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
அடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தால் அது ஏற்கப்படாது எனக் கூறி தீர்ப்பளித்து முடித்து வைத்தார்.
மேலும் அவர் சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்கவில்லை என கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என காட்டமாக கேள்வி எழுப்பினார். தற்போது விநாயகர் சிலை வைப்பதில் ஏராளமான அரசியல் செய்யப்படுவதாக கூறிய நீதிபதி இவை அனைத்தும் தனது சொந்த கருத்துக்கள் என்றும் தெரிவித்தார்.