திமுக மேடையில் கலைஞரைப் பற்றி அடுக்குமொழியில் பேசி அசத்திய டி. ராஜேந்தர்
சென்னை அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பாக சென்னை பாடி யாதவா தெருவில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர டி.ஆர்.பாலு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் இயக்குநர் டி.ராஜேந்தர் கலந்துகொண்டு பேசினார்.
கலைஞர் தான் என்னை உருவாக்கினார் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். என் தாய் எனக்கு அண்ணாவையும், கலைஞரையும் காட்டி தான் வளர்த்தார் என்று குறிப்பிட்டுள்ளார். கலைஞர் தான் எனக்கு அரசியல் வழிகாட்டி, அவர் தான் என்னை உருவாக்கினார், கலைஞர் எனக்கு தாயுமானவன், தந்தையுமானவன், தலைவருமானவன். நல்லிணக்க நாயகராக அவரது வழித்தோன்றலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடக்கிறார் என்றும் கலைஞருக்கு இயக்குநர் டி. ராஜேந்தர் புகழாரம் சூட்டினார்.
ஆரம்ப காலகட்டத்தில் எம்ஜிஆருடன் சேர்ந்து அதிமுகவில் இணைந்து கட்சி பணி ஆற்றி வந்தார் இயக்குநர் டி. ராஜேந்தர். எம்ஜிஆர் அவர்களின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகினார். சிறிது இடைவெளிக்கு பிறகு, திமுக காட்சியில் இணைந்தார். நீண்ட காலமாக திமுக கட்சியில் ஒரு முக்கிய அங்கமாக வகித்து வந்தார், டி. ராஜேந்தர். கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது இயக்குனர் டி. ராஜேந்தர் அவர்களுக்கு சிறுசேமிப்புத்துறை துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இது அமைச்சருக்கு நிகரான ஒரு பதவியாகும்.
அதன்பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து பிரிந்து டி. ராஜேந்தர் அவர்கள் லட்சிய திமுக என்னும் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். பத்தாண்டுகளுக்கு மேலாக திமுக மேடையில் பேசாத இயக்குனர் டி. ராஜேந்தர் அவர்கள் தற்போது மீண்டும் திமுக மேடையில், திமுக நிகழ்ச்சியில் பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது டி.ராஜேந்தர் அவர்கள் திமுக சார்பாக பொதுமக்களிடம் வாக்குகள் கேட்டால் கட்சிக்கு பெரும் பலமாக இருக்கும் என திமுகவின் மூத்த நிர்வாகிகள் கருத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.