அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு

0
279
Vanniyarasu
Vanniyarasu

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு!

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியானது கடந்த தேர்தல் வரை சுமூகமாக தொடர்ந்து வந்தது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் இவ்விரு கூட்டணிகளுக்கிடையே சிறு சிறுகுழப்பங்கள் ஏற்பட துவங்கியது.சமீபத்திய அண்ணா மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சர்ச்சை பேச்சு கட்சியினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து அதிமுகவின் முக்கிய தலைவர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையின் அந்த பேச்சுக்கு கடும் விமர்சனம் செய்ததோடு பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றும் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த அதிமுக கூட்டத்தில் இதை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அந்த வகையில் அதிகாரபூர்வமாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி விலகல் தமிழக அரசியல் களத்தில் எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என பல்வேறு விதமாக யூகங்கள் வெளியானது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிவு திமுக கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவுகிறது. அதாவது திமுக கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான துணைக் கட்சிகள் பாஜகவை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு தான் அந்த கூட்டணியில் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.

தற்போது அவர்களுக்கு அதிமுக மூலமாக மாற்று வாய்ப்பும் உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விசிக,தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அணி மாறுவதற்கான அல்லது கூட்டணி பேரத்தை உயர்த்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக யூகங்கள் வெளியானது.

இதை உறுதி செய்யும் வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அளித்த பேட்டி அமைந்துள்ளது. அதில் அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது வரவேற்க தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரும் அதிமுக கூட்டணியில் இணைய விருப்பம் காட்டுகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக குறைந்தபட்சம் தனக்கான வாய்ப்பு இருபக்கமும் இருக்கிறது என்பதை வேல்முருகன் அளித்த பேட்டியில் மறைமுகமாக திமுக தலைமைக்கு உணர்த்தியுள்ளார்.

அதே நேரத்தில் விசிக சார்பாக வன்னியரசு அந்தர் பல்டி அடித்து இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக கட்சி துணை தலைவரான வன்னியரசு திமுகவை புகழ்ந்து கூறியுள்ளார்.அதில் பாஜக பாசிச அரசை அண்ணா,பெரியார், ஆகியோரின் கொள்கை வழியில் எதிர்க்கும் திருமாவளவன் போல அரசியல் களத்தில் இருந்துகொண்டே நெஞ்சுரத்தோடு எதிர்க்கும் துணிச்சல் ஸ்டாலினை தவிர யாருக்கு இருக்கிறது. எனவும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளர்.அந்த வகையில் பாசிச பாஜகவையும் சனாதனத்தையும் எதிர்க்க எங்கள் கூட்டணி துணிந்து போராடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனால் அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்ற செய்தி வந்தவுடன் அதிமுகவுடன் விசிக இணையும் என்று நினைத்தவர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது.கடந்த தேர்தலில் 6 சீட் மட்டுமே கொடுத்திருந்தாலும் எங்கள் கூட்டணியின் முக்கிய நோக்கம் பாசிச பாஜகாவை எதிர்ப்பது ஒன்றேயாகும் என்பதால் அதில் தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.ஒருபோதும் எங்கள் கட்சி சனாதானத்திற்கு துணை போகாது என்றும் அவர் கூறினார்.

விசிக திமுக கூட்டணியில் இருந்தாலும் கட்சியினர் இவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என்பது அவ்வப்போது நடந்தேறும் சில சம்பவங்கள் உணர்த்தியது. குறிப்பாக விசிக போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு கட்சி தலைவர்களை பிரச்சாரத்துக்கு கூட அழைப்பதில்லை. அவர்களின் சின்னத்தில் போட்டியிட அனுமதி இல்லை. திமுக அமைச்சர்களுடன் சரி சமமாக உட்கார அனுமதியில்லை என பல முரண்பாடுகள் இருந்தும் விசிக அக்கூட்டணியில் இருப்பது ஏன் என சாமானிய மக்களே கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கு முன் அவர்கள் எதிர்க்கும் பாஜக அதிமுக கூட்டணியில் இருப்பதால் வேறு வழியே இல்லாமல் திமுகவை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆனால் தற்போது கூட்டணி உடைந்துள்ள நிலையில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தியை கூட ஏற்றுக் கொள்ளாமல் அதற்கே அந்தர் பல்டி அடித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான வன்னியரசு கருத்து தெரிவித்து உள்ளார். இது அக்கட்சியின் இயலாமையை வெளிப்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஜனவரி 22ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்!!! கட்டுமானக் குழுத்தலைவர் அறிவிப்பு!!!
Next articleவிசிக தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!