371 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ!!!
விண்வெளியில் தங்கி 371 நாட்கள் ஆராய்ச்சி பணி மேற்கொண்டிருந்த நாசாவின் விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ அவர்கள் நேற்று(செப்டம்பர்28) காலை பூமிக்கு திரும்பியுள்ளார் என்று நாசா அறிவித்துள்ளது.
விண்வெளியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸ் ஸ்டேசனில் ஏற்பட்ட கூலண்ட் என்று அழைக்கப்படும் குளிர்சாதன லீக்கை சரி செய்வதற்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக கடந்த வருடம் நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ அவர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டார்.
6 மாதங்களுக்கு விண்வெளியில் தங்கி பணி செய்வதற்காக விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ அவர்கள் விண்வெளிக்கு சென்றார். 6 மாதங்கள் கழிந்து பூமிக்கு திரும்ப வேண்டிய நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக ஃபிராங்க் ரூபியோ அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாமல் போனது.
இந்நிலையில் ஃபிராங்க் ரூபியோ அவர்கள் விண்வெளியில் 371 நாட்கள் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம்(செப்டம்பர்27) கஜகஸ்தான் அருகே ரஷ்யா விண்வெளி வீரர்கள் செர்ஜி புரோகோபியேவ், டிபிட்ரி பெட்லின் ஆகியோருடன் சோயஸ் எம்எஸ்23 கேப்சியூல் மூலமாக பூமிக்கு திரும்பினார். பூமிக்கு திரும்பிய ஃபிராங்க் ரூபியோ அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஃபிராங்க் ரூபியோ அவர்கள் “பூமிக்கு வந்தது சிறப்பாக இருக்கின்றது. இவ்வளவு நாட்கள் நான் விண்வெளியில் இருப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இவ்வளவு நாட்கள் விண்வெளியில் இருந்து விட்டு தற்பொழுது பூமியின் திடீர் ஈர்ப்பு விசையை உணரும் பொழுது வித்தியாசமாக இருக்கின்றது. இந்த ஈர்ப்பு விசை புது விதமான உணர்வை எனக்கு கொடுக்கின்றது” என்று கூறினார்.
விண்வெளியில் 371 நாட்கள் தங்கிய ஃபிராங்க் ரூபியோ அவர்கள் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி இருந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் 355 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தது தான் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.