வெற்றிமாறன் வேண்டாம் – விஜய் எடுத்த அதிரடி முடிவு

0
158

வெற்றிமாறன் வேண்டாம் – விஜய் எடுத்த அதிரடி முடிவு

பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்த வெற்றிமாறன், ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தில் பணியாற்றிய போது தனுசுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக ‘பொல்லாதவன்’ பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலேயே தனது முத்திரையைப் பதித்தவர், அதனைத் தொடர்ந்து மீண்டும் தனுசுடன் இணைந்த அவர் ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலமாக அந்த வருடத்தின் சிறந்த இயக்குநராகத் தேசிய விருது பெற்றார். அத்துடன் தனுஷுன் சிறந்த நடிப்பை வெளிக் கொணர்ந்து அவரையும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறச் செய்தார்.

இதனால் தனுஷ் – வெற்றிமாறன் இடையே இருந்த நட்பு மேலும் இணக்கமானது. அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை அவர் இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகும், சில நாட்களுக்குப் பின்னர் அவர் தனுசுடன் இனைந்து பணிபுரிவதாகத் தகவல் வரும். இப்படிச் சென்று கொண்டிருந்த நிலையில் தான் சமுத்திரக்கனி, தினேஷ் ஆகியோர் நடிப்பில் ‘விசாரணை’ படத்தினை இயக்கினார்.

அந்த படம் பல நாட்டுத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட, அதுவரை இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருந்த வெற்றிமாறன், உலக அளவில் கவனம் பெற்றார். ‘விசாரணை’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அதன் பின்னர் தனுசுடன் ‘வட சென்னை’ படத்திற்காக இனைந்தார். அந்த படத்திற்கு வட சென்னையில் வசிக்கும் மக்கள் சிலரிடம் கண்டனங்கள் எழுந்த போதும், ரசிகர்களை அந்தப் படம் வெகுவாக கவர்ந்தது.

அடுத்து ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டத்திலிருந்தவர், அதனைத் தான் அடுத்து படம் செய்ய ஒப்புக் கொண்ட தயாரிப்பாளர் தாணுவிற்கு இயக்கி தரத் திட்டமிட, தாணுவோ வெற்றிமாறனிடம் ‘வடசென்னை’ முதல் பாகத்தை இயக்கிய வுண்டர்பார் நிறுவனத்துக்கே அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குவது தான் சரியாக இருக்கும் எனக் கூறியவர், தன்னுடைய நிறுவனத்திற்குக் குறுகிய காலத்தில் ஓர் படத்தினை இயக்கி தருமாறும் இயக்குனர் வெற்றிமாறனிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

தாணு கேட்டுக் கொண்டதன் பேரில் ‘வெக்கை’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘அசுரன்’ படத்தினை இயக்கினார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவரின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. தமிழ் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் விஜய் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று இருவரின் படங்களையும் அடுத்தடுத்து இயக்குவார் எனத் தகவல் வெளியானது. ‘வாடிவாசல்’ எனும் நாவலை அதே தலைப்பில் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் அவர் விஜய்யுடன் இணைந்து பணிபுரியவிருந்த படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விசாரித்த போது, விஜய்யை சந்தித்து கதையை விவாதித்துள்ளார் வெற்றிமாறன். விஜய்க்கும் கதை பிடித்துப் போக, தான் அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்குப் படம் நடித்துத் தர ஒப்பந்த செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களைச் சந்தித்து அடுத்த கட்ட வேலைகளைக் கவனிக்குமாறும் விஜய் வெற்றிமாறனிடம் கூறியுள்ளார்.

ஆனால் வெற்றிமாறனோ தான் தயாரிப்பாளர் தாணுவிற்கு இந்த படத்தினை இயக்கி தருவதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விஜய் தான் அளித்த உறுதியை மீறி மற்றொரு தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நடித்துத் தர வாய்ப்பில்லை எனக் கூற, வெற்றிமாறன் தாணு தான் தயாரிப்பாளர் என்று விடாப்பிடியாக நிற்க, விஜய் வேறு வழியின்றி வெற்றிமாறன் வேண்டாம் என முடிவெடுத்ததாகக் கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Previous articleஉயரும் கொரோனா பலி… அலறும் மக்கள்… நீளும் உள்ளூர் மற்றும் உலக நாடுகள் பட்டியல்..!!
Next articleஇந்திய தொழிலதிபர் துபாயில் தற்கொலை! தொழில்துறையினர் சோகம்