பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி

0
119

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி

ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவுக்கு சொந்தமான 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக இயக்கியுள்ளார். மார்ச் இறுதி வாரத்தில் வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரானா ஊரடங்கு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த படம் வெளியாகவிருந்த சூழலில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனத்திற்கு விற்ற தயாரிப்பு தரப்பு, அதில் படத்தினை மே மாதம் அவர்கள் தளத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகததால் அந்த சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகிக் கொள்ள நினைத்த அமேசான் தரப்பு, படத்தினை நேரடியாக தங்கள் தளத்தில் வெளியிட முன் வந்தால் அதற்கு ஓர் பெரிய தொகையைத் தருவதாக கூறியுள்ளது. ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத காரணத்தால் அவர்கள் கேட்ட தொகை லாபகரமாக இருந்ததால் 2டி தரப்பும் அமேசானில் நேரடியாகப் படத்தை வெளியிட ஒப்புக் கொண்டது.

இந்த தகவல் வெளியில் கசிய, சூர்யாவுக்கு எதிராகத் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் திரண்டனர். ‘பொன்மகள் வந்தாள்’ படத்தினை நேரடியாக டிஜிட்டலில் வெளியிட்டால் சூர்யாவின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப் போவதில்லை என அறிவித்தனர்.

‘பொன்மகள் வந்தாள்’ படத்தினை நேரடியாக டிஜிட்டலில் வெளியிடுவதன் மூலம் தங்களுக்கான புதிய வியாபார கதவு திறப்பதை உணர்ந்து கொண்ட தயாரிப்பாளர்கள் சூர்யாவுக்கு ஆதரவாக நின்றனர். மேலும் இது குறித்து நாள் தோறும் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விவாதத்தில் ஈடுபட்டு வாட்ஸாப் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் திரையரங்கில் பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்பதாலும், அரசு நிர்ணயித்த பார்க்கிங் கட்டணத்தை பின் பற்றாததாலுமே மக்கள் திரையரங்கைப் புறக்கணிக்கத் துவங்கியுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டனர். அதில் படத்தை முதலீடு செய்து தயாரிக்கும் தங்களுக்கு அதை எங்கு வேண்டுமானாலும் வெளியிட்டு முதலீட்டைத் திரும்பப் பெற உரிமையுள்ளது எனவும் தெரிவித்திருந்தனர்

அதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரபல விநியோஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் “சமீபமாகத் தயாரிப்பாளர்கள் அனைவருமே OTT-ல் படங்கள் வெளியாவது எங்கள் உரிமை எனப் பேசுகிறீர்கள். தாணு சார், சிவா சார் தொடங்கி அனைத்து நண்பர்களுமே இதைத் தான் பேசியுள்ளனர். கொஞ்சம் பின்னால் திரும்பிப் பாருங்கள். எத்தனை மேடைகளில் எத்தனை தயாரிப்பாளர்கள் சிறு படங்களுக்குத் திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவு தரவில்லை எனப் பேசியிருப்பீர்கள்.

அப்போது என்ன படம் போடுவது, போடாதது அவர்கள் உரிமை என்று தெரியவில்லையா. இஷ்டப்பட்டால் போடட்டும் இல்லையென்றால் விட்டு விடட்டும் என விட்டிருக்கலாமே நீங்கள். ஏன் மேடைகளில் அவ்வளவு பேசினீர்கள்?. அப்படியெல்லாம் பேசியிருக்கவே கூடாது. திரையரங்க உரிமையாளர்கள் காட்சி கொடுப்பதும், கொடுக்காதது அவர்களுடைய விருப்பம் என்று அல்லவா பேசியிருக்க வேண்டும். நாங்களாவது ஒரு காட்சி, 2 காட்சி கொடுத்தோம். டிஜிட்டல் நிறுவனத்தில் சதவீத அடிப்படையில் கொடுத்தீர்கள் என்றால், உங்களுடைய படம் எங்கிருக்கும் என்றே தெரியாது.

அதே போல் திரையரங்க உரிமையாளர்கள் சரியாகக் கணக்கு கொடுப்பதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், டிஜிட்டல் முறையில் போய் நீங்கள் கணக்குக் கேளுங்கள். அவர்கள் எப்படி கணக்குக் கொடுக்கிறார்கள் என்பதை நாங்களும் தெரிந்து கொள்கிறோம். அவர்கள் என்ன டைப் செய்து கொடுக்கிறார்களோ அது தான் கணக்கு. மொத்தமாக விற்றுவிட்டால் வேண்டுமானால் அமைதியாக இருந்துக் கொள்ளலாம்.

திரையரங்கில் படம் ஓட்டி பேமஸ் ஆக்கிக் கொடுத்த படங்களை மட்டுமே டிஜிட்டல் நிறுவனம் விலைக்கு வாங்குவார்கள். மீதி அத்தனை படங்களையும் சதவீத அடிப்படையில் தான் போடச் சொல்வார்கள். மறுபடியும் சொல்கிறேன். ‘பொன்மகள் வந்தாள்’ படம் டிஜிட்டலில் வெளியிட்டதற்கு வருத்தப்பட்டதற்கு ஒரே காரணம். மூன்று மாதங்களாகப் படப்பிடிப்பு இல்லை. இருக்கும் படங்களை டிஜிட்டலில் விற்றால், நான் திரையரங்குகளைத் திறக்கும் போது என்ன படம் போடுவது.

நஷ்டம் என்பது அனைத்து தொழிலுக்கும் உள்ளது. நஷ்டத்தைத் தாங்கிக் கொண்டு தான் நாங்களும் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு பெரிய நிறுவனம் அவர்களுடைய படத்தை 3 மாதம் கழித்து வெளியிட்டால் பணம் வரப்போகிறது. அவர்கள் கொடுத்துவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில் தான் சொன்னாமே ஒழிய, தனிப்பட்ட பகை எதுவுமே இல்லை. திரையரங்கைத் திறந்தால் போடுவதற்குப் படமில்லை என்ற ஆதங்கத்தில் தான் பேசினோம். அதை வைத்துக் கொண்டு கடந்த 4 நாட்களாகத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதுமட்டுமன்றி, பாப்கார்ன் 100 ரூபாய்க்கு விற்கிறார்கள், டிக்கெட் அதிகவிலைக்கு விற்கிறார்கள் என மேடையில் எவ்வளவோ விஷயம் பேசுகிறீர்கள். இனிமேல் மேடையில் நீங்கள் வாயைத் திறந்து பேசுங்கள். திரையரங்கில் யாரேனும் முதலீடு செய்துள்ளீர்களா? நான் முதலீடு போட்டுக் கட்டியிருக்கும் திரையரங்கில் விற்கும் பாப்கார்னுக்கு முதலமைச்சர் வரை போய் புகார் கொடுத்தீர்கள்.

இனிமேல் பாப்கார்ன் விலை, பார்க்கிங் கட்டணம் என யாராவது பேசினீர்கள் என்றால், நாங்களும் பின்பு கடுமையாகப் பேச வேண்டியதிருக்கும். உரிமை உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல. எங்களுக்கும் சொந்தம். திரையரங்கை நாங்கள் முதல் போட்டுக் கட்டியுள்ளோம். அதில் என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பது எல்லாம் எங்களுடைய உரிமை. நீங்கள் முடிவு பண்ணியது போல் நாங்களும் முடிவு பண்ணிக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Previous articleகொரோனா கட்டுப்பாடு – பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய ‘குடி’மகன்!
Next articleநிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு – தேதியை அறிவித்த தமிழக அரசு