ஆன்லைன் மூலம் மது விற்பனை – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

0
154

ஆன்லைன் மூலம் மது விற்பனை – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 நாட்களுக்கு மேலாக மது கிடைக்காமல் தவித்து வந்த மது பிரியர்கள், இப்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், உற்சாகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான கடைகளில் கொரோனா குறித்த அச்சம் எதுவும் இன்றி, குடிமகன்கள் தனி மனித இடைவெளியை பின் பற்றவில்லை. இதனால் மதுக்கடைகள் கொரோனா பரப்பும் ஹாட்ஸ்பாட்டாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் மதுக் கடைகளைத் திறக்கும் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் மதுக்கடைகளில் சமூக விலகல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மது விற்பனை மற்றும் விதிமுறைகள் தொடர்பாக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு விடியோ கான்ஃபரின்ஸிங் வாயிலாக நேற்று உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது மது விற்பனை தொடர்பாக அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி அசோக் பூஷன் தெரிவித்தார்.

ஆனால், சமூக விலகல் நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில், மறைமுக விற்பனை அல்லது ஆன்லைன் மூலம் மது விற்பனை மேற்கொண்டு ஹோம் டெலிவரி செய்வது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். அத்துடன் மனுதாரரின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இதேபோன்று தமிழகத்தில் மதுபானக் கடை திறப்புக்கு எதிரான வழக்கு நேற்று உயர்நீதி மன்றத்தில் விசாரணையின்போது, மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅடித்தட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் மின்சார திருத்த சட்டம் தேவையற்றது – பாமக தலைவர் ராமதாஸ்
Next articleடாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா! – உண்மை என்ன?