புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் விடுத்த வேண்டுகோள்
கொரோனா வைரசின் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக பெரும்பாலான வெளிமாநில தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் ஒவ்வொரு மாநில அரசும் இவர்களை தற்கால முகாம்களில் தங்க வைத்தனர்.இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மட்டங்களிலும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.ஆரம்பத்திலேயே அவர்களுக்கான தங்கும் முகாம், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பராமரிக்க உத்தரவு எனப் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. ஆனாலும், பல இடங்களில் போதிய அடிப்படை வசதி கிடைக்காமல் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனைகளையெல்லாம் சமாளிக்கும் விதமாக சமீபத்தில் மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களை அனைவரையும் அவரவர் மாநிலத்துக்குச் செல்ல அனுமதித்தது. இதை அனைத்து மாநிலங்களும் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும் இவ்வாறு சொந்த மாநிலங்களுக்கு செல்லும் நபர்களிடம் ரயில் கட்டணம் வாங்கியது பிரச்சினை ஆனது. இதனையடுத்து அவர்களுக்கான ரயில் கட்டணத்தையும் தமிழக அரசு தானே செலுத்த முன்வந்தது.
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் சில இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் வந்து போராடினர். காவல் துறையினர் அளித்த கோரிக்கையையும் அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் இன்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
”வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதுவரை 9 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, அதுவரை வெளிமாநிலத் தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.