கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் பரவத் துவங்கிய கொரோனா தொற்றுக்கு இது வரை சுமார் 70700க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறி சார்ந்த மருந்துகளையே மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.
ஒரு பக்கம் அலோபதி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும், நமது பாரம்பரிய மருத்து முறையான சித்த ஆயுர்வேத மருத்துவத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியாதா என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவரான கே.எம்.செந்தமிழ் செல்வன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைச் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்றும் அதற்கு மத்திய மாநில அரசு தங்களை அனுமதிக்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இதனையடுத்து இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வசந்தகுமார், கொரோனாவுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்காத நிலையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவத்தில் இந்நோயை பரிபூரணமாக குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக்காட்ட தயாராக இருப்பதாகவும், சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், செந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பலவகை மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக உட்கொண்டாலே கொரோனா உள்ளிட்ட எல்லா வகையான நோய் கிருமிகளும் (வைரஸ்) அழிக்கப்பட்டுவிடும் என வாதிட்டார்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனாவை சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் குணப்படுத்த முடியுமா என்பதைக் கண்டறிய மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் கூறும் மூலிகையை பரிசீலிக்குமாறு, மத்திய-மாநில அரசுகளுக்கு விண்ணப்பிக்கும்படி மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அந்த விண்ணப்பத்தை நிபுணர் குழு பரிசீலித்து மூலிகை கலவை குறித்து விளக்கமளிக்க மனுதாரருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும், அந்த மருந்தை ஆய்வக பரிசோதனை செய்து ஒரு மாத காலத்திற்குள் அதன் முடிவை மனுதாரருக்கு தெரிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.