சீனாவில் இரண்டாவது இன்னிங்க்சை துவக்கிய கொரோனா? – அதிர்ச்சியில் அரசு

0
130

சீனாவில் இரண்டாவது இன்னிங்க்சை துவக்கிய கொரோனா? – அதிர்ச்சியில் அரசு

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகானதில் தான் முதன் முதலாக கொரோனா தொற்று தோன்றியது. அரசு சுதாரிப்பதற்குள் அதன் பரவல் அதிகரிக்க அந்த நகரையே லாக்டவுன் செய்தது சீன அரசு. அதற்குள் கொரோனா தொற்று உலகெங்கிலும் பரவியது.

கிட்டத்தட்ட மூன்று மாத போராட்டத்திற்குப் பின் தாங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக தெரிவித்த சீன அரசு, அந்நகரில் கொரோனா சிகிச்சை எடுத்து வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு சீனா திரும்பி வருகிறது.

இந்நிலையில் சீனாவின் வடகிழக்கு நகரமான ஜிலினில் செவ்வாயன்று ஆறு புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த வாரம், அருகிலுள்ள ஷுலானில் 11 உள்ளூர் வழக்குகள் பதிவாகியுள்ளன, இவை அனைத்தும் ஒரு உள்ளூர் சலவை பெண்மணியுடன் தொடர்பு பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான சீன அரசு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த புதிய பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இது குறித்து ஜிலின் துணை மேயரான காய் டோங்பிங் “தற்போதைய கொரோனா நிலைமை மிகவும் சிக்கலானது மற்றும் கடுமையானது, மேலும் வைரஸ் மேலும் பரவும் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, ஜிலின் நகர்ப்புறத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

வட கொரியா மற்றும் ரஷ்யாவின் எல்லையான ஜிலின் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஜிலின் ஆகும். அங்கு இப்போது பயணிகளுக்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிரடியாக வுகான் மாகானதில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா கண்டறியும் சோதனை நடத்தத் துவங்கியுள்ளது சீனா. தற்போது மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ள நிலையில் இது இரண்டாவது அலையோ என்ற அச்சத்திலிருக்கிறது சீனா.

Previous article20 லட்சம் கோடி நிவாரணம் யார் பயன் பெறுவார்கள்? – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Next articleபேஸ்புக்கால் மன நலம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் – இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு