நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் – டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 8ம் தேதி முதல் சென்னை தவிர்த்துப் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. டாஸ்மாக் கடைகளைத் திறக்க உயர்நீதி மன்றம் சில விதிமுறைகளை விதித்திருந்தது.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உயர்நீதி மன்ற விதிகள் மதிக்கப்படாததை சுட்டிக்காட்டி, மதுபான கடைகள் உடனடியாக மூட வேண்டும் என பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த உயர்நீதி மன்றம் உடனடியாக டாஸ்மாக கடைகளை மூட உத்தரவிட்டது. ஆன்லைனில் மதுபானங்களை விற்க அரசுக்கு அறிவுறுத்தியது.
டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 12 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதியின் முழு அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மதுக்கடையை திறக்கக் கூடாது என்று நீதிமன்றம் 8ஆம் தேதி உத்தரவிடப்பட்டதற்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் அளவிற்கு 16% கடைகள் தான் உள்ளன. சென்னையில் மட்டும் தான் இந்த பெரும்பாலான கடைகள் அமைந்திருக்கின்றன.
5,378 கடைகளில் 850 கடைகளில் மட்டும் தான் இந்த வசதி இருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் பணிகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பித்து விட்டது. கொரோனா ஊரடங்கால் இந்த பணியை தொடர முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறனர்.
சமூக இடைவெளி இல்லாமல் மதுக்கொடுப்பதை தடுப்பதற்காக தமிழக காவல்துறை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். அதேசமயம் 12 கடைகளை கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி திறக்கவில்லை என்றும் டாஸ்மாக் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடைக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு 70 பேர் என்ற கணக்கில் டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசு உத்தரவிற்க்கு உட்பட்டுத்தான் மதுக்கடைகள் கடைகள் திறக்கப்படுகின்றன. எனவே இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டிருக்கிறது.