இக்கதையை படமா எடுக்குறோம்! கட்டிப்பிடித்த சிவாஜி!

0
230
#image_title

 

மதுரையில் இருந்த போது தன் குடும்பத்தில் நடந்த உண்மைக்கதைக்கு வடிவம் கொடுத்து கதை – வசனங்களை எழுதி முடிக்கிறார் எம்.எஸ்.சோலைமலை.

 

கதையில் சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த சோலை மலை அவருக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்திருக்கிறார். இதற்கிடையில் குடும்பத்துடன் கம்பெனி காரில் மாமல்லபுரம் செல்கிறார். அவரது பிள்ளைகளை மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்க அனுப்பி விட்டு சோலைமலை தன் மனைவியுடன் ஓர் இடத்தில் உட்கார்ந்து சிவாஜியின் கதாபாத்திரத்தைப் பற்றி யோசித்து கொண்டிருக்கிறார்.

 

அப்போது, ஒரு சிறுவன் ஒரு கை ஊனமாகவும் இரண்டு கால்கள் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டு தவழ்ந்து வந்து இவர்களிடம் வாழ்வாதாரத்திற்காக பணம் கேட்கிறார். தவழ்ந்து வரும்போதே சிறுவனை சோலைமலை வைத்த கண் மாறாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார், இதைக்கண்ட சோலைமலையின் மனைவி, “என்னாங்க அவனையேப் பாக்குறீங்க, ஏதாச்சும் இருந்தா கொடுத்து அனுப்புங்க’ என்று சொல்ல, சோலைமலை பத்து ரூபாயைக் கொடுக்கிறார்.

 

உடனே மனைவி என்னங்க 10 ரூபாயை போடுறீங்க என்று கேட்க, “பரவாயில்ல, கஷ்டப்படுகின்ற ஆளுக்குதானே கொடுக்கிறோம், ஆனால், இந்தப் பத்து ரூபாய் எத்தனையோ பேருக்கு லட்சங்கள் சம்பாதிச்சுக் கொடுக்கப்போகுது’ என்கிறார் சோலைமலை. இந்த கதாபாத்திரம் மாமல்லபுரத்தில் தான் உருவாகியுள்ளது.

 

மகிழ்ச்சியாக இருந்த அண்ணன் தம்பிகளான வைத்தியலிங்க மூப்பனார், சுந்தரலிங்க மூப்பனார், மகன் கன்னையா மூப்பனார் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குடும்பத்தை எம்.ஆர்.ராதா தனது சதியால் பிரிக்கிறார். இறுதியில் சிவாஜியின் கையும் காலும் சரியாகிறது, பிரிந்த குடும்பம் ஒன்று சேருகிறது. இதுதான் கதை.

 

பாகப்பிரிவினை’ படத்துக்கான முழுக்கதையையும், வசனத்தையும், கதாபாத்திரங்களின் பெயர்களோடு ராயப்பேட்டை அஜந்தா பஸ் ஸ்டாப்புக்கு அருகில் இருந்த சந்திரா லாட்ஜில் ரூம் எடுத்து எழுதி முடித்து கதை சொல்வதற்காக சோலைமலையும் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியும் சிவாஜி வீட்டிற்குச் செல்கிறார்கள்.

 

வீட்டில் சிவாஜியோடு, எம்.ஆர். சந்தானம் மோகன் ஆர்ட்ஸ் மோகன், தயாரிப்பாளர் பெரியண்ணா, ஏ.பி.நாகராஜன், சில நண்பர்கள், இவர்களோடு பைனான்ஸியர்களும் கதை கேட்பதற்கு ரெடியாக இருக்கிறார்கள். சோலை மலைக்கோ ஒரே பயம்.

 

கதையைக் கேட்டவுடன் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அபிப்ராயத்தைச் சொல்ல, ஏ.பி.நாகராஜன் மட்டும் இக்கதையைப் படமாக எடுக்கலாம், நிச்சயமாக வெற்றி பெறும் என்று சொல்கிறார். சோலை மலை மூச்சு விடுகிறார்.

 

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட சிவாஜி எழுந்து உள்ளே செல்கிறார். இதைக்கண்டவுடன் சோலைமலைக்கு ஒரே பதற்றம்,

 

ஆனால், 15 நிமிடங்கள் கழித்து, இடது கையை மடக்கி வைத்துக் கொண்டு, அழுக்கு வேட்டி கட்டிக் கொண்டு கன்னையா மூப்பனாராகவே மாறி வெளியே வருகிறார்.

 

இதைப்பார்த்தவுடன் பதற்றமாக இருந்த சோலைமலை கண்களில் ஆனந்தக் கண்ணீர், சிவாஜியைக் கட்டித் தழுவி “என்னுடைய கன்னையாவை இங்கேயே பார்த்துட்டேன், இனிமே படம் எடுத்தா என்ன எடுக்காட்டி என்ன’ என்று சொல்ல, உடனே சிவாஜி “இக்கதையை படமா எடுக்குறோம்’ என்று சொல்லி சோலைமலையை கட்டி தழுவினார்.

 

அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

Previous article10 ஆம் வகுப்பு மாணவன் டீச்சரோடு ரொமான்டிக் போட்டோஷூட் !
Next articleசிவாஜி நடித்து ஓடாத படங்கள் குறித்த லிஸ்ட் இதோ!