மூன்றாம் கட்ட புதிய திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – முக்கிய அம்சங்கள் என்ன?

0
124

மூன்றாம் கட்ட புதிய திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – முக்கிய அம்சங்கள் என்ன?

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டதையடுத்து இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதை மீட்கும் பொருட்டு ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதற்கட்டமாக சில திட்டங்களை அறிவித்திருந்தார்.

சுயசார்பு திட்டம் என கூறப்படும் இத்திட்டத்தின் மூன்றாக் கட்டமாக விவசாயம், மீன்வளம் சார்ந்த புதிய திட்டங்களை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

அதன் அம்சங்களைக் கீழே தொகுத்தளித்துள்ளோம்.

  • விவசாயத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கப்படும். கொள்முதல் நிலைய உள்கட்டமைப்பு, குளிர்பதன கிடங்கு உள்ளிட்டவற்றுக்கு இந்த நிதி செலவிடப்படும்.
  • தமிழ்நாட்டின் மரவள்ளிக்கிழங்கு, ஆந்திரப்பிரதேசத்தின் மிளகாய் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பெயர்பெற்ற விவசாயப் பொருட்கள் குறித்து சர்வதேச அளவில் விளம்பரப்படுத்துவதற்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக “பிரதமரின் மீன்வள திட்டம்” என்ற பெயரில் புதிய திட்டம் தொடக்கம். இதன் மூலம், நாடு முழுவதும் மீன்வளத்துறையை மேம்படுத்த 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதில் ஒன்பது ஆயிரம் கோடி மீன்வளத்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மீதமுள்ள 11 ஆயிரம் கோடி மீனவர்கள் நலனுக்காகவும் செலவிடப்படும்.
  • கால்நடைகளின் நோய்த்தடுப்பு திட்டங்களுக்கு 13,343 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இந்த நிதியை கொண்டு, நாட்டிலுள்ள அனைத்து எருமை, செம்மறி ஆடு, ஆடு மற்றும் பன்றிகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
  • கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பால் பதப்படுத்துதல் நிலையங்களை அமைக்கவும், மதிப்பு கூட்டல் மற்றும் கால்நடை தீவன உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தனியார் முதலீட்டை ஆதரிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
  • தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தியை ஊக்குவிக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மூலிகை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுவதை ஊக்குவிக்க 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதன் மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூலிகை பொருட்கள் பயிடப்படும் நிலப்பரப்பு 10,00,000 ஹெக்டராக அதிகரிக்கும்.
  • மாநிலங்களுக்கு இடையே விவசாய விளைபொருட்கள் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். இதன் மூலம், விவசாயிகளின் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.
  • தேசிய அளவிலான பேரிடர் அல்லது பஞ்சம் ஆகியவற்றால் விலை ஏற்றம் ஏற்படும்போது மட்டுமே விவசாய உற்பத்தி பொருட்கள் மீதான கையிருப்பு அளவை கட்டுப்படுத்துவது குறித்த விதிமுறைகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு.
  • வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளை ஆகியவை மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.
  • விவசாயப் பொருட்களை விநியோகம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஏற்கனவே தக்காளி, வெங்காயம் மற்றும் உருளை பயிருக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தற்போது காய்கள், பழங்கள் என அனைத்து பயிர்களுக்கும் வழங்கப்படும்
Previous articleஎப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்? – விமான ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகள் அறிமுகம்
Next articleதிடீரென ஏற்பட்ட தீவிபத்தில் கருகிய ஆடுகள்! வலியை கொடுத்த வாயில்லா ஜீவன்களின் அலறல் சத்தம்!