தொடரும் இந்து மதத்திற்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு! வாக்கு வங்கியை இழக்குமா திமுக!

0
305
#image_title

தொடரும் இந்து மதத்திற்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு! வாக்கு வங்கியை இழக்குமா திமுக!

இந்து மதத்திற்கு எதிரான நிகழ்வுகளுக்கு ஆதரவு கொடுக்கும் திமுக ராமர் கோவில் விவகாரத்தில் மீண்டும் அதை உறுதி செய்யும் வகையில் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது.

திமுக தொடர்ந்து இந்துக்களை காயப்படுத்துவதையும், இந்துக்கடவுள்களை இழிவு படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. திமுக பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையும், மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் கொள்கைகள் உடைய திராவிட கழகத்திலிருந்து பிரிந்து வந்தது. ஆனால் தற்போது கடவுள் மறுப்பு என்பது இந்துக் கடவுள் எதிர்ப்பாக மட்டும் சுருங்கிவிட்டது.

ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்று அண்ணா அறிவித்தாலும், நான் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், தேங்காயும் உடைக்கமாட்டேன் என ஸ்டாலின் முன்மொழிந்தாலும் திமுக தொடர்ந்து இந்துக்களையும், இந்துக் கடவுள்களை மட்டுமே விமர்சித்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சுப.வீரபாண்டியன் பெரும்பான்மை மக்களான இந்துக்களை எதிர்ப்பதே தங்கள் கடமை என்றும் பெரும்பான்மை மதத்தை எதிர்ப்பதே உலக வழக்கம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். அதாவது இந்துமத எதிர்ப்பில் தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து திமுக எம்பி ஆ.ராசா ‘தனித் தமிழ்நாடு கேட்ட பெரியாரை ஏற்றுக் கொண்ட திமுக, அவரது இந்த கோரிக்கையில் இருந்து விலகி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்…’ என்று கடுமையாக விமர்சித்தார்.

முன்னதாக திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியாரை திமுகவின் ஆதரவு கவிஞர் வைரமுத்து இழிவாக விமர்சித்தபோது, எல்லா அரசியல் தலைவர்களும் இந்துக்களுக்கு ஆதரவாக கண்டனம் தெரிவித்தனர்… ஆனால் திமுக மௌனம் காத்தது.

இவ்வாறு கடவுள் மறுப்புக் கொள்கையை பின்பற்றும் திமுக தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மட்டுமே பின்பற்றி வருகிறது. மற்ற மதத்தினருடைய கொள்கையையும் வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வருகிறது. உதாரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அழைத்தால் அவர்களது கடவுள் மறுப்புக் கொள்கை அவரை வரவிடாது தடுக்கும். ஆனால் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு மற்றும் ஹலால் வழிபாட்டு முறையையும், கிறிஸ்தவர்களின் கிறிஸ்து பிறப்பு வழிபாட்டு முறையையும் ஆதரிக்கும் விதமாக கிருஸ்துவ பண்டிகைகளுக்கும், இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் தவறாது வாழ்த்து சொல்லியும் அப்பண்டிகை விழாக்களில் கலந்து கொண்டு நோன்புக் காஞ்சி உண்டும், கேக் வெட்டியும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள். எந்த ஒரு இந்துப் பண்டிகைக்கும், இந்துக்களுக்கு அவர்கள் வாழ்த்து சொல்வது கிடையாது. மற்ற பண்டிகைகளுக்கும் அதே வரைமுறையை வைத்திருந்தால் இது தவறாகத் தெரியாது. திமுக-வின் இந்த வித்தியசமான மதச்சார்பு கொள்கை மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை பெரும்பான்மையின இந்து மக்களிடையே தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

கிருத்துவமும் இஸ்லாமியமும் மதம் தானே! அவர்கள் வழிபடுவதும் கடவுளைத் தானே! அவர்களிடையே சாதி பேதங்கள் இல்லையா? மூடநம்பிக்கைகள் இல்லையா? மதத்தைப் பரப்ப முயற்சிக்கவில்லையா? ஏன் திமுக இந்துக் கடவுள்களை மட்டும் இழிவுபடுத்துகிறது.

முன்னதாக ஒரு மாற்று மதத் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின், வேதியர்களை வைத்து நடத்தப்படும் இந்துத் திருமணத்தையும், அதன் சடங்குகளையும், அதில் ஓதப்படும் மந்திரங்களையும், இழிவுபடுத்திப் பேசினார். ஆனால் ஐயரை அமர வைத்து, இந்து முறைப்படி, அவரின் இல்லத்தில் அவரின் மாமனாரின் சதாபிஷேகம் நடக்க ஸ்டாலின் அட்சதை தூவும் காட்சி வாட்ஸாப்பில் வைரலானது.

ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர், ஸ்டாலின் நெற்றியில் குங்குமம் இட்டபோது அதை அந்த அர்ச்சகர் முன்னிலையிலேயே அழித்தார் ஸ்டாலின். இதே ரம்ஜான் பண்டிகையில் குல்லா போட்டுக் கொண்டு தானே நோம்புக் கஞ்சியை குடிக்கிறார்?

அதேபோல் திமுகவின் தொலைக்காட்சி நிறுவனமான கலைஞர் தொலைக்காட்சியில் இந்துப் பண்டிகை நாட்களில் உள்ள சிறப்பு நிகழ்ச்சிகளை விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று குறிப்பிடுவது வழக்கமாகவே உள்ளது.

அதனைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி, திருப்பதி கோவிலுக்குச் சென்று திரும்பிய போது “கோவிலில் இறைவனுக்கு முன் இருக்கும் உண்டியல் அருகே எப்போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். உண்மையில் கடவுள் இருக்கிறார் என்றால், அவரே உண்டியலை பாதுகாப்பாரே? ஏன் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்? கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையில் கடவுளை நம்புகிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார். இதே கேள்வியை உண்டி குலுக்கும் மற்ற மதத்தினரிடம் அவர் கேட்பதில்லை!

இதற்கெல்லாம் மேலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ”சனாதனத்தை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். ” என்றார்.

இவ்வாறாக தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் திமுக தற்போது ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவிலும் வெளிப்படையாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பு முதலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டில் வழங்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையும் வழங்கப்பட்டது.

ஆனால் இதனை எதிர்க்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ராமர் கோயில் திறப்பிற்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்று கூறியுள்ளார்.

மசூதி கட்டப்பட்டதே ஒரு கோயிலை இடித்துதான். இதனை உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. இவ்வாறு இருக்க திமுக இந்து மதத்தினருக்கு எதிராக செயல்படுவது ஏன்?

இவ்வாறு தொடர்ந்து பெரும்பான்மையின இந்து மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வரும் திமுக அவர்களது ஓட்டு வங்கியையும் இழக்க நேரிடலாம். மேலும் திமுக வின் ஓட்டு வங்கியாக உள்ள சிறுபான்மையினர் ஓட்டுகளை மட்டுமே எதிர்பார்த்து உள்ளதா திமுக எனும் கேள்விகளும் எழுகிறது.

மதத்தை வைத்து பாஜக அரசியல் நடத்துகிறதோ இல்லையோ மதச்சார்பை வைத்து திமுக அரசியல் நடத்துவது இனி மக்களிடம் எடுபடாது என்பதும் புலப்படுகிறது.

Previous articleதமிழகத்தில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்! 38- லிருந்து 48- ஆக உயர்வு?
Next articleதமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா?