பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கடன் வாங்கும் அளவை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரித்து இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலமாக மாநில அரசுகளுக்கு கூடுதலாக அதிகபட்சம் ரூ.4.28 லட்சம் கோடி வரை கடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் வீழ்ந்த இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். பிரதமர் அறிவித்துள்ள சுயசார்பு பொருளாதாரத்துக்காக தற்போது வரை ஐந்து கட்டங்களாகத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியுடனான ஆலோசனையின் போது மாநிலங்களின் கடன் பெறும் அளவை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சுயசார்பு பொருளாதாரத் திட்டத்திற்கான 5 ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிடும் போது மாநில அரசுகளுக்கான கடன் பெறும் அளவை அதிகரித்து அறிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் உள்நாட்டுமொத்த உற்பத்தியில் கடன் வாங்கும் அளவானது 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் என்ற அளவில் உயர்த்தப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலமாக மாநிலங்கள் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் அதிகபட்சமாக ரூ.4.28 லட்சம் கோடி வரை கூடுதல் கடனாக மாநிலங்களுக்குக் கிடைக்கும். மேலும் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமாக மாநிலங்களுக்கான கடன் பெறும் உச்சவரம்பு படிப்படியாக உயர்த்தப்படும்.
மேலும் கொரோனா பாதிப்பினால் மாநிலங்களை போலவே மத்திய அரசும் பெரிய அளவில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இருந்தாலும், மாநிலங்களுக்கு உதவி தேவைப்படும் இந்த நேரத்தில், மாநில அரசுக்கான ஆதரவை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு ரூ 46,038 கோடி கடந்த ஏப்ரலில் முழுமையாக வழங்கப்பட்டது. மேலும் வருவாய் பற்றாக்குறை மானியங்களாக மாநில அரசுகளுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ரூபாய் 12, 390 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை முன்கூட்டியை ரூபாய் 11,092 கோடி ஏப்ரல் முதல் வாரத்திலேயே கரோனா வைரஸுக்கு எதிரான பணிகளைத் தொடங்க விடுவிக்கப்பட்டது. இது தவிர மத்திய சுகாதாரத்துறை சார்பாக ரூ.4,113 கோடியும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு ஓவர் டிராப்ட் மூலம் கடன் பெறும் நாட்களை ரிசர்வ் வங்கி 14 லிருந்து 21 நாட்களாக உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் மாநில உள்நாட்டு உற்பத்தியின் மூலம் அதிகபட்சமாக ரூ.6.14 லட்சம் கோடி வரை கடன் பெற முடியும்.
இவ்வாறு மாநிலங்கள் தங்கள் கடன் பெறும் தகுதியில் இதுவரை வெறும் 14 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. மீதமுள்ள 86 சதவீதத்தை மாநில அரசுகள் பயன்படுத்தவில்லை. குறிப்பாக மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றுக் கடன் பெறும் சதவீதமும் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.