கசந்த சில வருடங்களாக இளைஞர்கள் அலைபேசி செயலி மூலம் விளையாட்டுக்கு அடிமையாகி வருகின்றனர். இதை போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து மருத்து நிபுணர்கள் எச்சரிக்கை செய்து வந்தாலும் இவர்கள் கேட்பதே இல்லை.
அப்படிப்பட்ட விளையாட்டு வரிசையில் தற்போது ‘பப்ஜி’ எனும் விளையாட்டு சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் அடிமை படுத்து வருகிறது. அதுவும் இந்த விளையாட்டை இண்டர்நெட்டின் உதவியுடன் நண்பர்களுடன் இனைந்து கூட்டாக இரவு பகல் பாராமல் விளையாடி வருகின்றனர். இதற்கு அடிமையாகிப் பல சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பல உபாதைகளுக்கு ஆளாகி வரும் நிலையில் ஈரோட்டை சேர்ந்த இளைஞர் ‘பப்ஜி’யால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.
ஈரோட்டிலுள்ள கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் அங்குள்ள பிரபல முட்டை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருபவர்.
சதீஷ்குமார் எந்நேரமும் அவரது அலைபேசியில் ‘பப்ஜி’ விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் பல முறை கண்டித்தும், அலைபேசியை பிடுங்கி வைத்தும் கேட்காமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். மேலும், அலைபேசி விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமென்கிற உந்துதல் அதிகம் இருந்து வந்ததுடன் அனைத்து விளையாட்டுகளிலும் வெற்றி பெற்றும் வந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, தொடர்ந்து அலைபேசி விளையாட்டுகளிலேயே மூழ்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (மே 19) மதியம் வழக்கம் போல் வீட்டுக்கு வெளியே அலைபேசி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் மிகவும் வியர்த்துப் போன நிலையில் விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்த சதீஷ்குமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனைத் தாமதமாகவே கவனித்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகவும், அதிக மன அழுத்தம் காரணமாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
அலைபேசியில் விளையாடி அதிக மன அழுத்தம் காரணமாக மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை கண்காணித்துக் கொண்டிருங்கள்.