கவலை வேண்டாம் – இனி ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்த ஒருமணி நேரத்தில் பணம் கணக்கில் டெபாசிட் ஆகிடுமாம்!!
தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் முதலில் செக் செய்வது ரயில் டிக்கெட்டுகள் இருக்கிறதா என்பது தான். ஏனெனில், ரயிலில் பயணம் மேற்கொள்வது மிகவும் சௌகரியமானது, மேலும் செலவையும் அது குறைக்கும் என்பதால் தான். பயணிகள் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியினை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது. இதன்படி ரயில் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி தளத்தில் முன்பதிவு செய்யலாம். அவ்வாறு முன்பதிவு செய்கையில், சில நேரங்களில் டிக்கெட் பதிவாகாமல் பணம் மட்டும் டெபிட் ஆகிவிடும். அதே போல், டிக்கெட் கேன்சல் செய்தாலும், புக் செய்த டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் தானாக டிக்கெட் கேன்சல் ஆனாலும் பணம் திரும்ப கிடைக்க 3 நாட்கள் வரை ஆகும்.
இந்திய ரயில்வேத்துறை ரயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், பயணிகளின் மேற்கண்ட சிரமத்தினை தீர்க்கும் வகையில் தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள தற்போது ரயில்வேத்துறை கையில் எடுத்துள்ளது. இதற்கான தீர்வினை மேற்கொள்ள ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வே டெக்னிக்கல் பிரிவான CRIS பிரிவு முயற்சி எடுத்து வருகிறது. இந்த முயற்சியானது தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
விரைவில் இந்த வசதி அமலுக்கு வரும் பட்சத்தில், முன்பதிவு செய்யும் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டாலும், தானாக கேன்சலானாலும், டிக்கெட் புக் ஆகாமல் பணம் மட்டும் பிடித்துக்கொள்ளப்பட்டாலும் ஒரு மணிநேரத்தில் பயணிகளின் பணம் அவர்களது வங்கி கணக்கில் டெபாசிட் ஆகிவிடும். உலகளவில் 4வது பெரிய ரயில்வே நெட்வெர்க் கொண்ட நாடு இந்தியா. தற்போதைய நவீன உலகில், பணம் டெபாசிட் ஆக அதிகபட்சம் 3 நாட்கள் ஆகிறது என்பதை மாற்றியமைக்கவே இந்த புதிய வசதி நடைமுறைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.