பாஜக மற்றும் அதிமுக தங்களின் அரசியல் விளையாட்டில் எதிரிகளை பழி வாங்க வன்கொடுமை சட்டத்தை கருவியாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
தி.மு.க.,வின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களைத் திடுமென தமிழகஅரசு கைது செய்திருக்கிறது.
தலித்மக்களின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதைப்போலவும், தலித்மக்களை யார் சீண்டினாலும் இழிவுபடுத்தினாலும் வேடிக்கைப் பார்க்கமாட்டோம்; கடுமையாக நடவடிக்கை எடுப்போமென சாதி- மதவெறியர்களையெல்லாம் எச்சரிப்பதைப் போலவும், இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் நடக்காத ஒரே மாநிலமாக தமிழகத்தைப் பாதுகாத்து வருவதைப்போலவும் ,அதீத பொறுப்புணர்வுடன் ஆர்.எஸ்.பாரதி அவர்களைக் கைது செய்து தனது சட்டபூர்வமான கடமையை ஆற்றியிருக்கிறது அ.தி.மு.க அரசு. எனவே, தலித்மக்களின் மீதான தமிழக அரசின் அக்கறையைப் பாராட்டாமலிருக்க இயலுமா?
கொரோனா காலத்திலும் தலித் மக்களுக்கெதிராக சாதிக்கொடுமைகள் நடந்துவிடக்கூடாதென கண்ணும்கருத்துமாய் செயல் படுவதால்தான், ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் தமிழக அரசின் கடமையுணர்வை நினைவுகூர்வது நம் கடமையல்லவா?
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தேசியகுற்ற ஆவண மைய அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.
கொரோனா மற்றும் முழுஅடைப்பு நெருக்கடி உள்ள இந்தச்சூழலிலும் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சாதிய வன்கொடுமைகள் நடந்துள்ளன. ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறி இருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட வேண்டிய சீராய்வு கூட்டம்கூட கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இவையெல்லாம் இந்த அரசு எந்த அளவுக்குத் தலித்மக்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் அக்கறையோடு இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாகும். இந்நிலையில், அந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் பகைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தலித் மக்களின் மீதான அக்கறையா? அல்லது அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையா? என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு தலித்மக்களுக்கான ‘தேசிய ஆணையம்’ ஏதேனும் முனைப்பு காட்டியதுண்டா? குறிப்பாக, ஆணவக்கொலைகளைத் தடுக்க அந்த ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அதற்கென ஒரு சட்டம் வேண்டுமென கோருகிறோமே, அதனை பா.ஜ.க அரசு என்றைக்காவது பொருட்படுத்தியதுண்டா?
ஆனால், தி.மு.க கூட்டணியைச் சிதறடிக்கும் அரசியல் விளையாட்டில் தலித்மக்களை பகடைக் காயாகப் பயன்படுத்துவதா? தேசிய ஆணையத்தையும் இதற்காக பா.ஜ.க அரசு பயன்படுத்துவது நியாயமா?
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தி.மு.க.வையும், அ.தி.மு.கவையும் பலவீனப்படுத்தாமல் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பது பா.ஜ.கவுக்குத் தெரியும். இந்நிலையில், அ.தி.மு.கவை முழுமையாகத் தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கும் பா.ஜ.க, தி.மு.கவைப் பலவீனப் படுத்துவதையே முதன்மையான செயல் திட்டமாக வரையறுத்துக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்தோடுதான் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பா.ஜ.க வாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க வாக இருந்தாலும் சரி அவர்கள் தமது அரசியல் விளையாட்டுகளை நேரடியாக நடத்துவதே முறையாக இருக்கும். அதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கருவியாக்குவதும், தலித்மக்களைப் பலிகடா ஆக்குவதும் ஏற்புடையதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அ.தி.மு.க அரசுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை நடத்திவருவதால் அவரைப் பழிவாங்க வேண்டுமென்கிற உணர்வு மேலோங்கியிருப்பதாலும், தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பா.ஜ.கவின் சாதி அரசியல் விளையாட்டுக்கு இணங்கிப்போக வேண்டிய இயலாமைக்கு ஆளாகியிருப்பதாலும் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசின் இப்போக்கு மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
பா.ஜ.க-அ.தி.மு.க நடத்தும் சாதி அரசியலையும், சாதி- மதவெறி சக்திகளின் கூட்டுச்சதியையும் சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து முறியடிப்போம் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.