ஆளுமையற்றதலைமை.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையை விமர்சித்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி..!
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் இந்த தேர்தலில் கூட்டணியை முறித்து கொண்டு தனித்தனி அணிகளாக பிரிந்து போட்டியிட்டு வருகிறார்கள். இரு அணிகளும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தியாயினி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.அதன்படி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கார்த்தியாயினி கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசு நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கியுள்ளது.
நிச்சயமாக சிதம்பரம் மக்களவை தொகுதியை சிறப்பாக கொண்டு செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.சிதம்பரம் மக்களவை தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்தவை. இங்கு விவசாயிகளுக்கான மானியம், உள்ளிட்ட மத்திய அரசின் பல நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் சேர்ந்துள்ளன.அதேபோல மகளிர் நிலையை மேம்படுத்த நூறு நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிதம்பரம் தொகுதியில் விவசாயம் மட்டுமின்றி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பில் கார்த்தியாயினி ஈடுபட்டிருந்தார்.இந்நிலையில், அவரிடம் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது.ஆனால் இந்த முறை அதிமுக தனித்து போட்டியிடுகிறது.இது பாதிப்பை ஏற்படுத்தாதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ”ஆளுமையற்ற தலைமையின் கீழ் ஒரு வலுவான கூட்டணி இல்லாத சூழல் காணப்படுகிறது.ஆனால் நாங்கள் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம்.அவர்கள் இல்லாததால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.