காவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!!
தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை ஆதரித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என்று கூறினார்.
ஆனால் இப்போது வரை அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில், இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருப்பதாவது, “காவிரி நடுவர் மன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவதுமாகும்.
இந்த வாக்குறுதியை சித்தராமையா அளித்து 3 நாட்களாகியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இந்த விவகாரத்தில் தமிழக நலன் காப்பது ஒரு முதல்வராக ஸ்டாலினின் கடமை.ஆனால் அவர் அமைதி காப்பதன் மூலம் காங்கிரஸ் மற்றும் கர்நாடக மாநில நலனுக்காக காவிரியில் தமிழக உரிமைகளை தாரைவார்க்க துணிந்து விட்டார் என்பதுதான் உண்மை” என மிகவும் காட்டமாக பதிவு செய்துள்ளார்.