அண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!

அண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!!

பாஜகவை எதிர்த்து அதிமுகவால் எதுவும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பது, அண்ணாமலையின் கருத்தை ஆமோதிப்பதாக உள்ளது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதை போல அதிமுகவை திமுகவும், பாஜகவும் பலவீனப்படுத்தி வருகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

பாஜக தமிழ்நாட்டில் காலெடுத்து வைப்பதற்கு காரணமாக இருந்ததே அதிமுகதான். தமிழ்நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தாமரை சின்னத்தை கொண்டு சேர்த்தது ஜெயலலிதாதான். அதன்பின்னர் இரு கட்சிகளுக்கான உறவு நீண்டகாலம் நீடிக்கவில்லை.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அதிமுகவுடன் அதிக நெருக்கம் காட்டியது பாஜக. அதிமுக வைக்கும் அனைத்து படிகளிலும் பாஜகவின் பங்கு நிச்சயம் இருந்தது என்பதை அறிய முடிந்தது. இப்படி நெருக்கம் காட்டிய இவ்விரு கட்சிகளும் தற்போது பகையுடன் இருப்பதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி எடுத்த சில அதிரடி முடிவுகள்தான். மறுபுறம்‌ பாஜகவின் அண்ணாமலையும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இரு கட்சிகளும் தனித்தனியே மக்களவை தேர்தல் களத்தை சந்திக்கின்றன. இந்த மக்களவை தேர்தலுக்கு பின்னர் அதிமுக காணாமல் போய்விடும் எனக் கூறியிருந்தார் அண்ணாமலை. இதனால் கடும் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, “கவுன்சிலர் ஆகக்கூட தகுதியில்லாத அண்ணாமலை, அதிமுகவை விமர்சிக்கலாமா?” என சாடியிருந்தார்.

அண்ணாமலைதான் இந்த கருத்தை ஆணித்தரமாக கூறுகிறார் என்றால், திமுக தலைவர் ஸ்டாலினும் இதே கருத்தை கூறியிருக்கிறார். இதுபற்றி பேசிய அவர், “சசிகலாவிடம் இருந்து பன்னீர்செல்வத்தைப் பிரித்து தர்மயுத்தம் நாடகம் நடத்த வைத்ததே பாஜகதான்;

சசிகலா சிறைக்குப் போன பிறகு, முதலமைச்சரான பழனிசாமியை தங்கள் பக்கம் கொண்டு வந்ததும் பாஜகதான்; இரு துருவங்களாக இருந்த பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் ஒன்றுசேர்த்ததும் பாஜகதான்;

தினகரனைக் கைது செய்து சிறையில் அடைத்து அவரையும் தங்களுடைய அடிமையாக மாற்றியதும் பாஜகதான்;இன்று பன்னீர்செல்வத்தையும் தினகரனையும் மிரட்டித் தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜகதான்;

சசிகலாவை அரசியல் பக்கம் வரக்கூடாது என்று தடுத்ததும் பாஜகதான்; பழனிசாமியைத் தனியாக நிற்கவைத்ததும் பாஜகதான். பாஜகவை எதிர்த்து பழனிசாமியால் கட்சி நடத்தவும் முடியாது; அரசியல் நடத்தவும் முடியாது” என்றார்.

அண்ணாமலை மற்றும் ஸ்டாலினின்

இந்த கருத்துகள், அதிமுக என்ற கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது என்ற சந்தேகத்தை தூண்டுகிறது. அதேசமயம் இந்த தேர்தலில் அதிமுகவை தாண்டி பாஜகவின் பாஜகவின் வெற்றி அதிகம் இருந்தால்  அதிமுக பலவீனமாகிக் கொண்டிருக்கிறதா? என்பது தெரிந்துவிடும்.