உளவு பார்க்க அனுப்பப்பட்டு இந்திய எல்லையில் சிக்கிய புறா

0
107

இந்திய காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தின் ஹிரா நகர் பகுதியில் உள்ள மன்யாரி எனும் கிராமத்துக்குள் புறா ஒன்று வந்து விழுந்துள்ளது. அதனைப் பார்த்து சந்தேகமடைந்த கிராமத்தினர் அதனை உடனடியாக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அது பாகிஸ்தானிலிருந்து அது பறந்து வந்ததாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

அந்த புறாவின் காலில் சில எண்கள் குறியீடு அடங்கிய மோதிரம் ஒன்று இருந்ததாகவும், அதனை கைப்பற்றி அதில் எழுதப்பட்டிருக்கும் சங்கேத குறீயிடுகளாக இருக்கும் ரகசிய தகவல் என்னவென்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த புறா உளவு பார்க்கும் பயிற்சியை பாகிஸ்தானில் பெற்றிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.

இந்தியாவுக்குள் ஊடுருவ ஏராளமான பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தயாராக இருப்பதாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்து வரும் நிலையில், தற்போது ரகசிய குறியீட்டை சுமந்துகொண்டு பாகிஸ்தானிலிருந்து உளவு புறா ஒன்று இந்திய எல்லைக்குள் புகுந்திருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

அந்த ரகசியத் தகவல் இந்தியாவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.

Previous articleராகவா லாரன்ஸ் நடத்தும் விடுதியில் கொரோனா தொற்று
Next articleஆகஸ்டில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்! – முக்கிய விதிமுறைகள் குறித்து முடிவு