முடிவில் உறுதியாக இருக்கும் வேங்கைவயல் கிராம மக்கள்.. வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடிகள் !!
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாக்காளர்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் இப்போது வரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மனித்க்கழிவுகளை கலந்து விட்டனர். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகியும் இப்போது வரை இதுதொடர்பாக ஒரு குற்றவாளியை கூட காவல்துறையினர் கை செய்யவில்லை. இதனால் இதை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அக்கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.
தேர்தல் அதிகாரிகளும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் ஆனால் கிராம மக்கள் அதில் சமாதனம் அடையவில்லை. அவர்களின் முடிவில் உறுதியாக உள்ளனர். காலை முதல் தற்போது வரை திருச்சி தொகுதிக்குட்பட்ட இந்த வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. 549 வாக்காளர்கள் உள்ள இந்த வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
வேங்கைவயல் மற்றும் இறையூர் ஆகிய இரு கிராமங்களை சேர்ந்த மக்கள் தான் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறியிருந்தனர். அதன்படியே தற்போது வரை இந்த இரு கிராமங்களில் இருந்து ஒருவர் கூட வாக்களிக்க முன்வரவில்லை. இதனால் இன்று மாலைக்குள் இந்த இரு கிராம மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.