கர்நாடக பல்கலைகழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம்..!! மன்னிப்பு கேட்ட குற்றவாளியின் தந்தை..!!
கர்நாடக மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவியை குத்திக் கொலை செய்த குற்றவாளியின் தந்தை மாணவியின் பெற்றோரிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
கர்நாடக மாநிலதின் ஹூப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத் அவர்கள் கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக இருக்கிறார். இவருடைய மகள் நேஹா ஹிரேமத் அவர்கள் ஹூப்ளியில் உள்ள கே.எல்.இ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
மாணவி நேஹா படித்து வந்த அதே பல்கலைக்கழகத்தில் ஃபயாஸ் என்ற மாணவரும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி நேஹாவை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மாணவர் ஃபயாஸ் அவர்கள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு லவ் ஜிகாத் தான் அடிப்படை காரணம் என்று மாணவி நேஹா அவர்களின் தந்தை நிரஞ்சன் ஹிரேமத் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து குற்றவாளி ஃபயாஸின் தந்தை பாபா சாஹேப் சுபானி அவர்கள் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேலும் இரண்டு கரங்களை கூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மாணவி நேஹா ஹிரேமத் அவர்களின் கொலை சம்பவம் குறித்து குற்றவாளியின் தந்தை பாபா சாஹேப் சுபானி அவர்கள் “மாணவி நேஹா கொலை சம்பவம் குறித்து மாலை 6 மணிக்குத் தான் எனக்கு தகவல் தெரிந்தது. இந்த தகவலை கேட்டவுடனே அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். இனிமேல் எதிர்காலத்தில் யாரும் இது போன்ற செயல்களை செய்யக்கூடாத வகையில் என்னுடைய மகன் தண்டிக்கப்பட வேண்டும்.
மாணவி நேஹாவை இழந்து வாடும் அவருடயை பெற்றோர்களிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும், கர்நாடக மாநில மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மாணவி நேஹாவும் என்னுடைய மகள் போன்றவர் தான்.
நானும் என்னுடைய மனைவியும் பிரிந்துவிட்டோம். 6 வருடங்களாக தனித்தனியாகத் தான் வாழ்ந்து வருகின்றோம். ஃபயாஸ் அவனுடைய தாயாருடன் தங்கி இருக்கிறான். ஃபயாஸூம் நேஹாவும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர் என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினான். அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன்.
என்னுடைய மகன் ஃபயாஸின் இந்த கொடூரமான செயல் முன்வல்லி ஊருக்கே கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டது. இந்த செயலுக்காக என்னை மன்னித்து விடுங்கள்” என்று குற்றவாளி ஃபயாஸின் தந்தை பாபா சாஹேப் சுபானி அவர்கள் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேஹாவை கொடூரமாக குத்தி கொலை செய்த குற்றவாளி ஃபயாஸை தூக்கில் போட வேண்டும். அப்பொழுதுதான் நேஹாவின் ஆன்மா சாந்தி அடையும் என்று மாணவி நேஹாவின் பெற்றோர் கூறி வருகின்றனர்.