இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆற்றில் சவாரி செய்த மக்கள்..!! படகு கவிழ்ந்து 58 பேர் பரிதாபமாக பலி..!!
ஆப்பிரிக்க நாட்டில் உள்ளூர் தலைவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆற்றில் படகு சவாரி செய்து கொண்டிருக்கும் பொழுது படகு கவிழ்ந்ததில் படகில் பயணம் செய்தவர்களில் 58 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு ஒன்று பாய்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் ஆற்றின் அந்த பக்கம் செல்வதற்கும் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கும் படகு போக்குவரத்தையே நம்பி உள்ளனர். அதனால் அங்கு பல படகுகள் சவாரி செய்வதற்காக இருக்கின்றது. இவ்வாறு ஆற்றில் பயணம் செய்யும் பொழுது பல விபத்துக்கள் ஏற்படுவதும் வழக்கமாக இருக்கின்றது.
இந்நிலையில் பாங்குய் நகரில் உள்ள ஒரு ஊரில் உள்ளூர் தலைவர் ஒருவர் இறந்துள்ளார். இவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று(ஏப்ரல்21) ஏராளமான மக்கள் படகில் ஏறி புறப்பட்டுள்ளனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் படகு எதிர்பாராத விதமாக ஆற்றினுள் கவிழ்ந்தது.
படகு ஆற்றினுள் கவிழ்ந்ததை அடுத்து படகில் சவாரி செய்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என. பலரும் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். விபத்தை அறிந்த உள்ளூர் மீனவர்கள் அனைவரும் தங்களுடைய மீன்பிடி படகுகள் மூலமாக ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களை காப்பாற்ற முயன்றனர். இதற்கு மத்தியில் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்று வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களை மீட்டு மற்றொரு படகில் ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர்.
மீட்பு பணிகள் வேகமாக நடந்தாலும் 58 பேர் ஆற்றினுள் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் மாயமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருக்கின்றது. இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையின் முடிவில் 100 பேர் மட்டும் பயணம் செய்யக் கூடிய படகில் 300 பேர் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக பாரம் தாங்காமல் படகு ஆற்றினுள் கவிழ்ந்திருக்கக் கூடும் என்று காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளனர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள படகில் சென்ற பொழுது படகு கவிழ்ந்து 58 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.