ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டுகின்றது!! பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!!
பாஜக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி அவர்கள் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக்க பாகிஸ்தான் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளில் சூரத் மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மீதம் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர், போர்பந்தர், ஆனந்த், பதான் உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர். நரேந்திர மோடி அவர்கள் பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரத்தில் நரேந்திர மோடி அவர்கள் “கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கு ஒரே ஒரு இரவில் முஸ்லீம்கள் அனைவரும் ஓபிசி பிரிவினர் என்று அறிவிக்கப்பட்டனர். அங்கு முஸ்லீம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கின்றது.
எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறித்து அதை முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும் என்ற திட்டத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கின்றது. நான் உயிரோடு இருக்கும் வரையில் மதத்தின் பெயரை வைத்து இடஒதுக்கீட்டை அமல்படுத்த நான் ஒரு போதும் விடமாட்டேன்.
அரசமைப்பு சாசனத்தை என்னிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி துடித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகும் 2 அரசமைப்பு சாசனங்கள், இரண்டு கொடிகள் இருந்தன. பாஜக கட்சி ஆட்சி அமைந்ததும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் விளைவாக ஒரு அரசமைப்பு சாசனம், ஒரு கொடி என்று அமலுக்கு வந்தது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பல தீவிரவாத தாக்குதல்களை நடத்தி கையில் வெடிகுண்டுகளை ஏந்தி நின்றது. பாஜக ஆட்சி ஏற்ற பின்னர் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் வெடிகுண்டை விட்டு பாத்திரத்தை கையில் ஏந்தி நிற்கின்றது. பாரதத்தில் அதாவது இந்தியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டும் என்று தற்பொழுது மன்றாடி வருகின்றது.
காங்கிரஸின் இளவரசர் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக்க பாகிஸ்தான் துடித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் அழிந்து கொண்டு வருகின்றது. இந்த துக்கத்தை தாங்க முடியாத பாகிஸ்தான் அங்கு அழுது கொண்டு இருக்கின்றது. இதன் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்பு அம்பலத்திற்கு வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த வரைக்கும் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் எத்தனை தீவுகள் உள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் இருந்தது. பாஜக கட்சியின் தலைமையில் நான் பிரதமராக வந்த பிறகு செயற்கைகோள்கள் மூலமாக இந்தியாவின் எல்லை பகுதிகளில் எத்தனை தீவுகள் உள்ளது என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்பொழுது இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் எத்தனை தீவுகள் இருக்கின்றது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இருக்கின்றது.
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் தேர்தல் அறிக்கையை போல இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னர் வோட் ஜிகாத்தில் அனைத்து முஸ்லீம்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணியில் உள்ள மூத்த தலைவர் ஒருவர் அழைப்பு விடுத்திருந்தார். இவருடைய அழைப்புக்கு இந்தியா கூட்டணியின் எந்தவொரு தலைவரும் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. மக்களவையை பிளவுபடுத்த நினைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இந்தியா கூட்டணிக்கும் குஜராத் மக்களவை தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்று அவர் பேசினார்.